விருது மேல் விருதை குவிக்கும் எஸ்.பி.வேலுமணி... உள்ளாட்சித்துறைக்கு 31 தேசிய விருதுகள்
சென்னை: தமிழக அரசின் உள்ளாட்சித் துறைக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 31 தேசிய விருதுகள் வழங்கியுள்ளது மத்திய அரசு.
மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சியின் சிறப்பான செயல்பாடு, தீன் தயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நேற்று மட்டும் 12 விருதுகள் தரப்பட்டுள்ளன.
அதனை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் பெற்றுக்கொண்டார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

12 விருதுகள்
தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தை ஊரகப்பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழக உள்ளாட்சித்துறைக்கு 12 விருதுகள் நேற்று வழங்கினார். இது மற்ற மாநிலங்களுக்கு, ஏன் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூட கிடைக்காத பெருமையாக பார்க்கிறது தமிழக அரசு.

31 விருதுகள்
கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 31 தேசிய விருதுகளை பெற்றுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதன் மூலம் டெல்லியில் தனக்கிருக்கும் செல்வாக்கை திமுகவிடம் காட்டியுள்ளார் அவர். உள்ளாட்சித்துறையில் ஊழல் நடப்பதாக கடந்த வாரம் கூட மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில், சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு விருது தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு இல்லம்
மகாத்மா காந்தி 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் அவரை சந்தித்த அமைச்சர் வேலுமணி வாழ்த்துப் பெற்றார்.

மத்திய அரசு
கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அப்போது கூட இதுபோன்ற விருதுகளை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது தமிழகத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications