ஒரே ஆண்டில் இலங்கை கடற்படையால் 333 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது- 45 படகுகள் பறிமுதல்!
சென்னை: இலங்கை கடற்படையால் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டு மீனவர்கள் 333 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டு மீனவர்களின் 45 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு கடல் எல்லையில் மீன்பிடித்த மேலும் 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை கடந்த 23-ந் தேதி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த ஒரே ஆண்டில் மட்டும் மொத்தம் 333 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 44 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் கடிதம் அனுப்பினார். அதில். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் காங்கேயன் கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையின் இத்தகைய அட்டூழியத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
முன்னர், பலமுறை இதுபோன்று தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், மீன்களை கடலில் கொட்டுவதும், வலைகளை அறுத்து எறிவதும், படகுகளை சேதப்படுத்துவதும், சிறையில் அடைப்பதும், வழக்கு போடுவதுமான சூழலில் தமிழக அரசு உரிய தலையீடுகள் செய்து, ஒன்றிய அரசை நிர்பந்தித்து, தமிழக மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.எனினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை கடற்படை தொடர்ந்து கூறி வருகிறது. கடும் புயல், காற்று மழை காலங்களில், கடல் எல்லைகளை தீர்மானிப்பது கடினம் என, பல்வேறு கடல் சார் மீனவர் ஒப்பந்தங்கள் உள்ளன. அனைத்தையும் இலங்கை அப்பட்டமாக மீறுகிறது.
மத்திய அரசும் வழக்கம் போல் நடந்து கொள்வது தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் தானா என கேள்வி எழுகிறது?. இந்தியாவின் - நட்பு நாடு இலங்கை என கூறப்பட்டாலும், அதன் நடவடிக்கைகள் அவ்வாறு இல்லை. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதோடு ஓர் நிரந்தர தீர்வுக்கு மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications