தவெக அமைச்சரவையில் 4 அதிமுக எம்எல்ஏக்கள்? யார் அவர்கள்? உத்தேச பட்டியல்
சென்னை: தவெகவுக்கு அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அக்கட்சியில் 4 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை உத்தேசமாக பார்க்கலாம்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் களமிறங்கிய அ.தி.மு.க. வெறும் 47 இடங்களை மட்டுமே வென்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதனால் அ.தி.மு.க. சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இந்தத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணியை சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக சென்னையில் இரு தரப்பினரும் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருபுறம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். மறுபுறம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சென்னை எம்.ஆர்.சி. நகர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தானே தொடர்வேன் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவருக்குச் சில மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு அளித்தாலும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் அவரது நிலைப்பாட்டை ஏற்க மறுக்கின்றனர்.
"எங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, எஸ்.பி. வேலுமணிதான் அ.தி.மு.க. சட்டமன்றக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும்'' என்று சி.வி. சண்முகம் தரப்பினர் அழுத்தமாக வலியுறுத்துகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதிலும் அவர்கள் உறுதியாய் உள்ளனர்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு கோரவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முழுமையான ஆதரவு அளித்து, ஆளும் அமைச்சரவையிலும் இடம் பெற சி.வி. சண்முகம் தரப்பினர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சி.வி. சண்முகம் தரப்பு தற்போது உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உட்பட 24 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க உள்ளனர் என அண்மையில் தகவல் வெளியானது. இவர்கள் இன்று மதியம் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவுள்ளனர்.
தவெகவில் அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை பார்க்கலாம். சட்டசபை குழுத் தலைவராக வேலுமணியும், துணைத் தலைவராக ஹரியும், செயலாளராக காமராஜும், அதிமுக கொறடாவாக சி.விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் அமைச்சரவையில் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், இசக்கி சுப்பையா, லீமா ரோஸ் அல்லது மரகதம் குமரவேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
அதிமுகவில் பிளவு என யாரும் சொல்ல வேண்டாம் என எஸ்பி வேலுமணியும் சிவி. சண்முகமும் கூறியிருந்தாலும், இன்று சட்டசபையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பேசியதும், எஸ்.பி.வேலுமணிக்கும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதிலிருந்தே பிளவு ஏற்பட்டிருப்பது வெளியே வந்துள்ளது.












Click it and Unblock the Notifications