விஸ்வரூபம் எடுக்கும் ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு.. சீனுக்குள் வந்த சிபிசிஐடி.. சிக்கலில் நயினார்?
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு உடையவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 பேர் சிக்கினர்.

பிடிபட்டவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏ-வும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் ஆய்வாளர் பால முரளியிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உள்ளனர்.
நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த 4 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தரப்பில் விரைவில் ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications