என்ன இது.. சென்னையே திடீருன்னு காலியாகிடுச்சி.. உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் டிராபிக் ஜாம்
சென்னை: தமிழ் புத்தாண்டு தினமான இன்று முதல் 4 நாள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர் செல்கின்றனர். இதனால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணிநேரம் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதால் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.
Recommended Video
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை புனித வெள்ளியாகும். அதன்பிறகு சனி, ஞாயிறு வருகிறது. இதனால் சென்னையில் உள்ள சில நிறுவனங்கள் 4 நாள் விடுமுறை அளித்துள்ளது.
பல நிறுவனங்களின் பணியாளர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். இன்று முதல் ஞாயிறு வரையிலான 4 நாள் விடுமுறையை கொண்டாட அவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர்.

கூடுதல் பஸ்கள் இயக்கம்
இதனால் வெளிமாவட்ட மக்கள் பிரச்சனைகள் ஏதுமின்றி சொந்த ஊர் செல்ல மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து துறை சார்பில் வழக்கத்தை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் மூலம் பலர் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். ஏராளமானவர்கள் கார்களில் வீடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்
இதனால் இன்று காலை முதல் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் சேலம், கோவை பகுதிகளை நோக்கி அதிகளவில் பஸ்கள், கார்கள் செல்கின்றன. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒருமணிநேரம் காத்திருப்பு
இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் காத்திருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் சுங்கச்சாவடி நோக்கி நகர்ந்தன. இந்த போக்குவரத்து நெரிசலால் பயணிகள் சிரமத்தை அனுபவித்தனர். போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதும் கடும் சவாலாக இருந்தது.

கூடுதல் கவுண்ட்டர்கள் திறப்பு
இதனால் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் விரைவாக அனுமதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது. விபத்துகள் ஏற்படாதவாறு கண்காணிப்பு பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications