Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நள்ளிரவுக்கு மேல் 4% வாக்குகள் ஆளும் கட்சி கூட்டணியான என்.டி.ஏவுக்கு கிடைத்துள்ளதாக ஒரு பகிரங்க குற்றச்சாட்டைப் பொருளாதார நிபுணரும் சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் திடீர் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நான்குமுனைப் போட்டியால் பரபரப்பு எகிறியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை அறிவிப்பதில் சுணக்கம் நிலவுவதே ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றொரு பக்கம் பாஜக தன் வேட்பாளர் அறிவிப்பில் சடுகுடு ஆடிவருகிறது. தனித்து களம் கண்டுள்ள தவெக முதன்முறையாக தன் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிப் போராடி வருகிறது.

Andhra-style Election

விஜய் வருகையால் யாருக்குப் பாதிப்பு என விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது, இந்த முறையும் தனித்தே போட்டி என அறிவித்து முதல் ஆளாகப் பரப்புரைக்குத் தயாராகி இருந்த நாதகவுக்கு இந்தத் தேர்தல் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஆந்திராவில் நடந்தது என்ன?

தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்ட வாக்காளர் மறுசீராய்வு முறையால் ('சார்') பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் வாக்கு சதவீதம் பாதிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த 2024 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் கிளம்பியுள்ளது. இந்தத் திடீர் குற்றச்சாட்டால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற 2024 சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இக்கூட்டணியில் பவன் கல்யாண் இடம்பெற்றிருந்தார். இக்கூட்டணி வெற்றி பெற்றதால் சந்திரபாபு முதல்வராகப் பதவியேற்ற போது பவன் கல்யாணுக்குத் துணை முதல்வர் பதவியை அளித்து ஒரு அதிரடி மாற்றத்தை ஆந்திராவில் உருவாக்கினார். ஆனால், இப்போது 2024 தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

அதாவது 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான 'இயல்புக்கு மாறான' வாக்குப்பதிவுகள் குறித்து, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 4.16 சதவீத வாக்குகள் இரவு 11:45 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பதிவாகியுள்ளதாகவும், அந்த வாக்குகள் என்.டி.ஏ கூட்டணிக்குச் சாதகமாக அமைந்ததாகவும் பொருளாதார நிபுணரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நள்ளிரவுக்குப் பின் பதிவான சுமார் 17 லட்சம் வாக்குகளானது வெறும் ஆறு வினாடிகளுக்குள் பதிவான வாக்குகள் என்று அவர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில், 'இயல்புக்கு மாறான' வாக்குப்பதிவு முறையை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த தேர்தல்களில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இடம்பெற்ற என்.டி.ஏ கூட்டணி, மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 164 தொகுதிகளைக் கைப்பற்றி, அமோக வெற்றியைப் பெற்றது.

இத்தேர்தல் முறைகேடு பற்றிப் பேசிய பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர், 3,500 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். கிடைத்துள்ள தேர்தல் தரவுகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, மொத்த வாக்குகளில் சுமார் 4.16 சதவீத வாக்குகள் இரவு 11:45 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில் பதிவாகியுள்ளன.

இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சுமார் 52 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். நள்ளிரவுக்குப் பின் மட்டும் 17 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நள்ளிரவுக்குப் பிந்தைய நேரத்தில், ஒவ்வொரு 20 வினாடிகளுக்கும் ஒரு வாக்கு வீதம் பதிவாகியுள்ளது என்பதே இதில் மிகவும் வியக்கத்தக்க உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

"பொதுவாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (ஈவிஎம்) ரீசெட் ஆக சுமார் 14 நிமிடங்கள் தேவைப்படும். அப்படி எனில் வெறும் 6 வினாடிக்குள் வாக்குகள் எப்படிப் பதிவாக முடியும்? இந்தக் குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்களித்துவிட்டு உடனடியாக வெளியேற முடியுமா?" என்று நுட்பமாக ஒரு கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இது பலரை யோசிக்க வைத்துள்ளது. முன்னதாகவே பாஜக தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். எதிர்க்கட்சிகளும் அதைக் கூறிவருகின்றன.

உஷார் அய்யா, உஷார்:

இப்போது பிரபாகர், "இரவு 8 மணிக்கு மேல் "ஏதோ ஒரு இயல்புக்கு மாறான நிகழ்வு" நடந்திருப்பதாகப் புகாரை முன்வைத்துள்ளார். நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 135 தொகுதிகளைத் தெலுங்கு தேசம் கைப்பற்றியது. பாஜக 8 தொகுதிகளையும் பவன் கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளையும் வென்றது. 2024 மே 13 அன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி (சி.இ.ஒ), 68.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடகங்களிடம் கூறினார்.

இந்தியத் தேர்தல் ஆணையம், இரவு 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், பதிவான வாக்கு சதவீதம் 68.12% என்று குறிப்பிட்டிருந்தது. இரவு 11.45 மணிக்கு, தேர்தல் ஆணையம் அந்த வாக்குப்பதிவு சதவீதத்தை 76.50% ஆகத் திருத்தி வெளியிட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு விவரங்களில், அந்த எண்ணிக்கை 81.79% ஆக உயர்ந்தது.

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதை அறிந்த அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம். ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ளவில்லை. "தேர்தல் நடந்து 2 ஆண்டுகள் கடந்த பின் அது தொடர்பான தரவுகளை மறுபடி கிளறுவது அரசியலமைப்புக்கு எதிரானது" என மற்றொரு வாதமும் அரசியல் மன்றத்தில் முன்வைக்கப்படுகிறது.

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தேர்தல் நடைமுறையில் நிலவும் வெளிப்படைத்தன்மை அற்ற நிலையை மையப்படுத்திப் பேசினார். இச்செய்தியாளர் சந்திப்பு தமிழக அரசியல் கட்சிகளை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆந்திராவின் 'நள்ளிரவு வாக்குப்பதிவு ஃபார்மூலா' ஒருவேளை இங்கேயும் செயல்படுத்தப்படுமோ எனச் சந்தேகத்தை அரசியல் கட்சிகள் மத்தியில் உண்டாக்கி உள்ளது.

-கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+