அமெரிக்காவில் 3 வார கால பயிற்சி.. அழைக்கப்பட்ட தென் மாநில 4 இளம் அரசியல் பிரமுகர்கள்!
சென்னை: அஇஅதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவின் கோவை மண்டல செயலாளராக பணியாற்றி வரும் சிங்கை ஜி.இராமச்சந்திரன் உட்பட 4 இளம் அரசியல் பிரமுகர்களுக்கு, அமெரிக்க அரசு 82 வருட பழமையான International Visitor Leadership Program on Young Politicians: The Future of Indian Democracy (IVLP) எனப்படும் மூன்று வார கால பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இப்பயிற்சியில் அமெரிக்க நாட்டின் அரசியல், அரசியல் அமைப்பு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, அரசாங்க வெளிப்படைத்தன்மை, ஆட்சிமுறை, மக்களாட்சி தத்துவம் உள்ளிட்ட தலைமைப் பண்பிற்கு தேவையான அனைத்தும் கற்றுத்தரப்படும். International Visitor Leadership Program (IVLP) அதாவது சர்வதேச வருகையாளர்களின் தலைமைத்துவ பண்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி என்பது அமெரிக்க அரசின் Department of State's Bureau of Educational and Cultural Affairs பணியகத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு தொழில்முறை பரிமாற்றத் திட்டமாகும்.
தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைவர்களுக்கு சர்வதேச அளவிலான அரசியல், தொழில், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதே IVLP இன் முக்கிய நோக்கமாகும். இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் 5,000 தலைவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து அழைக்கப்படுகிறார்கள். மூன்று வார காலம் நடைபெறும் இப்பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் அமெரிக்க தூதரகத்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படுவார்கள். International Visitor Leadership Program நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து தற்போதைய மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து அடல் பிகாரி வாஜ்பாய் (1960), இந்திரா காந்தி (1961), மொரார்ஜி தேசாய் (1962), பிரதமர் நரேந்திர மோடி (1993) உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தற்போது International Visitor Leadership Program (IVLP) பயிற்சியில் பங்கேற்பதற்காக சிங்கை ஜி இராமச்சந்திரன் உட்பட 4 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன் கோயமுத்தூர் பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டப் படிப்பையும் IIM அகமதாபாத்தில் MBA பட்டப் படிப்பையும் முடித்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு மறைந்த, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கோவை மண்டலச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகி SG சூர்யா, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் இருந்து வருண், மற்றும் கர்நாடக பாஜகவை
சேர்ந்த சம்பத் ராமானுஜம் ( Elected Representative - Seegehalli) ஆகியோருக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் அமெரிக்க அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. இத்தகைய பழமையும் சிறப்பும் வாய்ந்த நிகழ்ச்சிக்கு தற்போது தென்இந்தியாவைச் சேர்ந்த நான்கு இளம் அரசியல்வாதிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய ஒன்றாகும். மேலும் இது போன்ற ஆளுமை திறன், தன்னம்பிக்கை, நவீன தொழில் நுட்பம் உள்ளிட்ட திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளில் இன்றைய இளைஞர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்பு வேலைகளோடு நின்றுவிடாமல் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சேவைகளிலும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். இதுவே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஐக்கிய நாடு சபை ஆய்வு அறிக்கை ஒன்றில், உலகிலேயே இளைஞர்கள் அதிகளவில் வசிக்கும் நாடு இந்தியா தான் என்கிறது. இந்தியாவில் சுமார் 35.60 கோடி இளைஞர்கள் உள்ளனர். எனவே "வருங்கால இந்தியா நிச்சயம் இளைஞர்கள் கையில் தான்" என்பதை உணர்ந்து ஒவ்வொரு இளைஞரும் செயல்படவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆகும்.












Click it and Unblock the Notifications