அம்மா பண்ற வேலையா இது? தெலுங்கானாவில் 40 வயது நபருக்கு 13 வயசு மகளை கட்டி வைத்து.. மனசாட்சி இல்லை?
சென்னை: தமிழகத்தை போலவே, தெலங்கானா மாநிலத்திலும் குழந்தை திருமணங்கள் பெருகி வருகின்றன.. பெண் குழந்தைகளுக்கு திருமணம் தருவதனால், ஏற்படும் உடல் மற்றும் சமூக விளைவுகளை பற்றி ஏராளமான விழிப்புணர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.. எனினும், குழந்தை திருமணங்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.. சமீப காலமாகவே ஓரளவு குறைந்து காணப்பட்ட இதுபோன்ற திருமணங்கள் இப்போது மீண்டும் அதிகரித்தபடி உள்ளது.. அந்தவகையில் இந்த தெலுங்கானா சம்பவமும் அதிர்ச்சி தந்து கொண்டிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் நந்திகாமா பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகி, 13 வயதில் மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் நிலைமைக்கு வந்துவிட்டார்.

எனவே, அரசு பள்ளில் 8ம் வகுப்பு படித்து வரும் தன்னுடைய13 வயது மகளுக்கு, திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.. இதற்காக 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடு என்பவருடன் கடந்த மே 28ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தையும் நடத்தினார்.
இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சிறுமி, அம்மாவின் கட்டளைக்கு இணங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். திருமணம் முடிந்த பிறகு, தான் பள்ளிக்கு சென்று மீண்டும் படிக்க வேண்டும் என்று வீட்டில் சிறுமி அடம் பிடித்துள்ளார்.. இதையடுத்து, கடந்த வாரம் முதல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
5 பேருமே கைது
பள்ளிக்கு சென்ற முதல்நாளே மாணவி, தன்னுடைய ஆசிரியர்களிடம் தனக்கு நடைபெற்ற கட்டாய திருமணத்தை சொல்லி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், மாணவியிடம் புகாரை பெற்று, அவரது அம்மா, புது மாப்பிள்ளை ஸ்ரீநிவாஸ் கவுடு, புரோக்கர் என 3 பேருமே விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
ஆனால்,இவர்களுடன் சேர்ந்து மேலும் 2 பேர் தற்போது கைதாகி உள்ளது, பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
வாடகை வீடு - ஆதரவற்ற நிலைமை
தங்களுக்கு ஆதரவு தர ஒருத்தருமில்லாததால், வாடகைக்கு வசித்த வீட்டு உரிமையாளரிடம், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.. இதற்கு பிறகே புரோக்கர் மூலம் 40 வயது நபர் வரனை பார்த்து, 13 வயது சிறுமிக்கு பேசி முடித்துள்ளனர்.. கடந்த மே 28ம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது..
இந்த கட்டாய திருமணத்தை, சிறுமியின் தாயார், சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீனிவாஸ் கவுட், இடைத்தரகர், சட்டவிரோத திருமணத்தை நடத்திவைத்த நபர், மற்றும் திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் ஒரு பெண் ஆகியோர் மீது தற்போது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, இவர்கள் அனைவருமே கைதாகி உள்ளதாக தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.
மைனருடன் பாலியல் உறவு
இந்த சட்டவிரோத திருமணம் குறித்து தகவல் தெரிவித்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரவீன் குமார், "பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் கீழ், மைனருடன் பாலியல் உறவு கொள்வது தண்டனைக்குரியது.
சம்பந்தப்பட்ட மாணவி, ஸ்ரீனிவாஸ் கவுட் என்பவருடன் சுமார் 2 மாதங்கள் இணைந்து வாழ்ந்துள்ளார்.. இந்த 2 மாதத்தில், சிறுமி பாலியல் உறவுக்கு வற்புறுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.. எனவே, சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீனிவாஸ் கவுட் மீது போக்சோவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2 மாதத்துக்கு பிறகு மீட்பு
இதனிடையே, மீட்கப்பட்ட சிறுமி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசாங்க ஆதரவுடன் கூடிய சகி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து ஆலோசனை மற்றும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது..
பள்ளி மாணவியின் ஆசிரியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக சட்டவிரோத திருமணத்தில் சிக்கித் தவித்த சிறுமி மீட்கப்பட்டுள்ள சம்பவமும், இவர்களுக்கு திருமணம் முடித்து வைத்த 5 பேரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.
மோசமான விளைவுகள்
குழந்தை பருவத்திலேயே, பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போக்கு, தமிழ்நாட்டிலும் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது.. இப்படி திருமணம் முடித்துவைப்பதன் மூலம், அந்த பிஞ்சு குழந்தைகளின் சமூக வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுப்போகின்றன.
அத்துடன், ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதால், பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கொண்டதாக பிறக்க நேரிடுகின்றது.. இதனால், கருவுற்ற குழந்தைக்கும் பாதிப்பை தருகின்றன.. மேலும் பெண் சிசு கொலைகளுக்கும் வழிவகுத்துவிடுகின்றன.
அந்தவகையில் பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில், விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி போன்றவை முன்னணியில் இருப்பதால், மாவட்டங்களில் நம்முடைய தமிழக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications