PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!
சென்னை: நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS) வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பலனளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டில் மட்டும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உணவுத் துறை இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், பொது விநியோகத் திட்டம் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டதே இந்த பெரிய சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது நாட்டில் 99.2 சதவீத பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மேலும், 98.75 சதவீத உணவுத்தானிய விநியோகம் பயனாளிகளின் டிஜிட்டல் சரிபார்ப்பு மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், உண்மையான பயனாளிகள் மட்டுமே திட்ட பலன்களை பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறையால், போலி மற்றும் தகுதியற்ற அட்டைகள் எளிதாக கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன. 2023-ஆம் ஆண்டில் 41.99 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்ட நிலையில், 2024-இல் அது 48.85 லட்சமாக உயர்ந்தது. அதன்பிறகு 2025-இல் 41.41 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில வாரியாக பார்க்கும்போது, ஹரியானா மாநிலத்தில் அதிகபட்சமாக 13.43 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் (6.05 லட்சம்), உத்தர பிரதேசம் (5.97 லட்சம்), மேற்கு வங்கம் (3.74 லட்சம்), மத்திய பிரதேசம் (2.60 லட்சம்) ஆகிய மாநிலங்களில் பெருமளவில் போலி அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்வதாகும். காரணம், குடும்ப அட்டை அல்லது ரேஷன் கார்டு என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல், பல்வேறு நலத்திட்டங்களுக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இவை தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 7.46 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தியோதயா அட்டையுடையவர்களுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. மற்ற அட்டைகளுக்கு பொதுவாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
மேலும், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பொருட்களின் அளவும் மாறுபடும். இதன் மூலம், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தேவையுள்ளவர்களுக்கு சரியான அளவில் உதவி கிடைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மொத்தத்தில், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் போலி குடும்ப அட்டைகளை நீக்கும் நடவடிக்கை, பொது விநியோகத் திட்டத்தை மேலும் வெளிப்படையானதும் நம்பகமானதுமாக மாற்றியுள்ளது. இதே நேரத்தில், உண்மையான பயனாளிகளுக்கு நேரடியாக நன்மை கிடைக்கும் சூழலும் வலுவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications