3 பிளைட்.. 48 மணி நேரம் டிராவல்! ஜெர்மனி டூ சென்னை! ஓட்டு போட ஓடி வந்த பாட்டி!
சென்னை: நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் வேலை செய்து வரும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், ஓட்டு போட சொந்த ஊர் போவதை போல.. வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம், மே-10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்கியிருக்கிறது. எனவே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. பரப்புரைகள் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், பரப்புரைக்கு பிந்தைய தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.
நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கியிருக்கின்றனர். சென்னையிலிருந்து உள் மாவட்டங்களுக்கு மக்கள் செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நேற்றிவு தொடங்கி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதேபோல எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
மறுபுறம் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் சொந்த ஊர் வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜெர்மனியிலிருந்து 3 விமானங்கள் மாறி, சுமார் 48 மணி நேரம் பயணித்து மூதாட்டி ஒருவர், தனது குடும்பத்துடன் வாக்களிக்க சென்னை வந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
இப்படி வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.
நாளை பதிவாகும் வாக்குகள் மே.4 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) வைத்திருப்பது முதன்மையானது. ஒருவேளை அது இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.
- ஆதார் அட்டை (Aadhaar Card)
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை (MGNREGA Job Card)
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்
- தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- பான் அட்டை (PAN Card)
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு (NPR Smart Card)
- பாஸ்போர்ட் (Indian Passport)
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய, மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
- நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
- தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID Card)
ஆகியவற்றை கொண்டு வாக்களிக்க முடியும். தமிழகத்தில் சமீபத்தில் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications