தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை எப்படி அமைக்கப்படும்.. ஜிஎஸ்டி சாலையில் வரும் புதிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கியமான ரயில் வழித்தடமான தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 பாதைகள் தான் உள்ளது. நான்காவது ரயில் பாதை இல்லை.. இந்நிலையில் நான்காது ரயில் பாதைக்கான இட ஆய்வுப் பணியை தெற்கு ரயில்வே நிறைவு செய்துள்ளது. 31 கி.மீ. நீளமுள்ள இந்தத் தடத்தில், ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை செல்லத் தக்க வகையில் 4 வது பாதை வடிவமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் புதிய ரயில் பாதைகள் 110 கி.மீ. வேகத்திற்காக வடிவமைக்கப்படும் நிலையில், முதல்முறையாக இந்த பாதை 160 கிமீ செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு வழியாகவே செல்கின்றன. சென்னைக்கும் 80 சதவீத தமிழ்நாட்டிற்குமான நுழைவு வாயில் என்றால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வழிதான்.

4th railway line on Tambaram - Chengalpattu route New change to take place on GST road

மிகவும் வேகமாக வளரும் புறநகர் பகுதியும் சென்னையில் இதுதான். மிகவும் பிஸியான ரயில் வழித்தடமாக இருக்கிறது. ஆனால் தாம்பரம் வரை நான்கு பாதை இருந்தாலும், செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை 3வது பாதை என்பது இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே உள்ள மூன்றாவது பாதை ஆகஸ்ட் 2022-இல் திறக்கப்பட்டது.

மொத்தம் மூன்று பாதைகள்

மொத்தம் உள்ள மூன்று பாதைகளில், இரண்டு பாதைகள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே எக்ஸ்பிரஸ் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில், மூன்றாவது பாதை செங்கல்பட்டு நோக்கிய புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. எந்த டிராக்கில் எந்த வண்டி வரும் என்பது சமயத்தில் தெரியாது. மாறி மாறி விடப்படும்.

கடற்கரை செங்கல்பட்டு வழித்தடம்

சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே 60 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் தினசரி சுமார் நான்கு லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். இதில் 245 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. தற்போது, தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் 23 தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஏழு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது. எப்போதும் ரயில்கள் சென்ற வண்ணம் இருக்கும்.

நான்காவது பாதை

பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்தது. அதற்கு ஆய்வு பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் நிலம் எடுப்பது தொடர்பான இறுதி இட ஆய்வுப் பணியை (Final Location Survey - FLS) தெற்கு ரயில்வே நிறைவு செய்திருக்கிறது.

160 கிமீ வேகத்தில் ரயில்கள்

31 கி.மீ. நீளமுள்ள இந்தத் தடம், ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை செல்லத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது இங்கு 160 கிமீ வேகத்தில் அமைக்கப்படும் இத்தகைய முதல் பாதையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த பிராந்தியத்தில் புதிய பாதைகள் பொதுவாக மணிக்கு 110 கி.மீ. வேகத்திற்காகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

ஜிஎஸ்டி சாலையில் சிக்கல்

தற்போதுள்ள குறைந்த பாதை காரணமாக, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப கூடுதல் மின்சார ரயில் சேவைகளை செங்கல்பட்டுக்கு அறிமுகப்படுத்த முடியவில்லை. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் அதிக அளவில் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால், பலர், தனிப்பட்ட வாகனங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தாம்பரம் செங்கல்பட்டு இடையான ஜிஎஸ்டி சாலை கடுமையான நெரிசலை சந்தித்து வருகிறது. தற்போது ரயில்வேயால் முன்மொழியப்பட்ட நான்காவது பாதை, புறநகர் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டிற்கும் தனி இரட்டைப் பாதைகளை உருவாக்க உதவும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.


கிழக்கு பக்கம் வரும் ரயில் பாதை

இறுதி இட ஆய்வுப் பணி தொடர்பான FLS அறிக்கை, ரயில்வே வாரியத்தின் திட்ட மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, நிலம் கையகப்படுத்தும் செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த நான்காவது பாதை, இருக்கும் தண்டவாளங்களின் கிழக்கு பக்கமாக, அதாவது ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

713.4 கோடி மதிப்பீடு

மேலும், அதிக வேகத்தில் ரயில்களை இயக்க ஏதுவாக, பாதை முழுமையாக வேலியிடப்பட உள்ளது (இந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்களை 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க போகிறார்கள்). ரயில்வே வாரியம் அனுமதி அளித்தவுடன் பணிகள் தொடங்கும். இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 713.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு பகுதிக்கு பதில் கிழக்கு பகுதியில் 4வது பாதைக்கு ரயில்வே திட்டமிட காரணம் இல்லாமல் இல்லை..


100 சதவீதம் ரயில்வே நிதி

ஏனெனில் தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை ரயில்வேயை ஓட்டி மிகவும் அதிக அளவில் குடியிருப்புப் பகுதிகளாக உள்ளன. சாலை மேம்பாலத் தூண்கள் இருக்கிறது. இதனால் மேற்குப் பக்கமாகப் பாதையை அமைக்கும் திட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு பக்கம் அந்த அளவிற்கு நிலம் கையகப்படுத்த தேவைப்படாது. எளிதாக திட்டத்தை நிறைவேற்றிவிட முடியும். இந்த திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன், பணிகள் தொடங்கும் என்றும், இந்த திட்டம் 100 சதவீதம் முழுமையாக ரயில்வேயால் நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்,

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம்

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (CUMTA) மூலம் மாநில அரசு, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே பயணம் செய்யும் பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைக் காரணம் காட்டி, திட்டத்தை விரைவுபடுத்துமாறு ரயில்வேயை ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. இதன்படியே திட்டம் விரைவாக நடந்து வருகிறது.

சரக்கு முனையம் அமைக்கப்பட உள்ளது

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை செங்கல்பட்டை நோக்கி நகரம் விரிவடைந்து வருவதால், நான்காவது பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் (Detailed Project Report) தயாரிக்க நாங்களே முன்வந்தோம். எனினும் ரயில்வேயே அப்பணியை ஏற்றுக்கொண்டது. ஒப்புதல் கிடைத்தவுடன், நிலம் கையகப்படுத்தும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் விரைவுபடுத்தும். மேலும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் திட்டம் எந்த அளவிற்கு மிக மிக அவசியமானது என்பது குறித்தும் சமர்ப்பித்துள்ளது. பொத்தேரியில் (காட்டாங்குளத்தூர் மற்றும் கூடுவாஞ்சேரிக்கு இடையே) ஒரு சரக்கு முனையத்தை அமைக்க நாங்கள் முன்மொழிந்தோம், இது தற்போது நான்காவது பாதை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது."இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+