ஈரக்குலையே நடுங்குதே.. அதுவும் 5 தெரு நாய்களாம்.. வசமாக சிக்கிய நபர்கள்.. கடைசியில் பார்த்தால்..?
கருத்தடை செய்ததில், 5 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பராமரிப்பாளர்கள் யாருமின்றி.. அங்குள்ள தெருக்களில் வளரும் நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன... இதனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வேண்டுகோளை ஏற்ற சுகாதாரத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கணக்கெடுக்கும் பணியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறங்கியது..

கருத்தடை
அதன்படி, 1, 350 நாய்கள் கண்டறியப்பட்டது.. இந்த நாய்களுக்கு கருத்தடை செய்யவும் முடிவு செய்தனர்.. அதன்பின், செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பாசி தெருவில், தெரு நாய்களை பிடிக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தோர் ஈடுபட்டனர். இந்த நாய்களுக்கு கருத்தடை செய்து, மீண்டும் சம்பந்தப்பட்ட தெருக்களிலேயே அந்த நாய்கள் கொண்டுவிடப்படும் என்று சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்....

பகீர் வீடியோ
இந்நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.. செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழந்துவிட்டதாக, சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின.. இதையடுத்து, அது தொடர்பான வீடியோவும் வைரலாக பரவியது.. அந்த வீடியோவில் கிட்டத்தட்ட 5 நாய்கள் பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழக்கும் காட்சிகளை கண்டு, பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் பதறிப்போய்விட்டனர்.

வெட்ட வெளிச்சம்
உடனடியாக இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு, காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.. அந்த ஆய்வின்படி, தன்னுடைய முதல்கட்ட விசாரணையையும் அவர் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார்... அந்த அறிக்கையில், Animal Trust of India (NGO) என்ற தன்னார்வ நிறுவனம், இந்திய விலங்கு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கிவந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆபரேஷன்
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில், தன்னார்வ நிறுவனம் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யாமலும், விதிமுறைகளை மீறியும் இந்த தன்னார்வ நிறுவனம் இயங்கி வந்துள்ளதும் விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11 (a) விதிப்படி, மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 428 & 429 விதிப்படி, செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், தன்னார்வ நிறுவனத்தின் மீது, எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பர்மிஷன்
இது தொடர்பாக தன்னார்வ நிறுவனத்தின் பணிகளை, செங்கல்பட்டு நகராட்சி நகர் நல அலுவலர் முத்து மேற்பார்வை செய்ய தவறியதனால் அவர் மீதும், மற்றும் செங்கல்பட்டு நகராட்சி துய்மை ஆய்வாளர் பால் டேவிஸ் ஆய்வுபணி மேற்கொள்ளாததால், அவர் மீதும் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்டம் விசாரணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டு விரிவான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..

விடையில்லா கேள்வி
எனினும், முறைப்படி பதிவு செய்யாமல், தன்னார்வலர் அமைப்பு எப்படி செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ஆய்வுக்கூடத்தில் அனுமதிக்கப்பட்டனர்? எப்படி கருத்தடை செய்யும் அளவுக்கு இவர்கள் துணிந்தனர்? யார் அவர்களுக்கு அனுமதி தந்தது? என்ற கேள்விகளும் இணையத்தில் வட்டமடிக்கின்றன.. இவர்களின் அஜாக்கிரதைக்கு, பரிதாப நாய்கள் சுருண்டு விழுந்து இறக்க வேண்டுமா? என்றும் ஆதங்க கேள்விகள் வெடித்து கிளம்பி உள்ளன.












Click it and Unblock the Notifications