ஈஷா யோகா மையத்தில் மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர்.. ஐகோர்ட்டில் காவல் துறை பதில்
சென்னை: ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சிவராத்திரி உள்ளிட்ட நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. இந்த ஈஷா மையத்தில் சேவை புரிய வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் வருகிறார்கள்.

இங்கு அவர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குலசேகரன்பட்டியை சேர்ந்த விவசாயி திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2007ஆம் ஆண்டு கோவை ஈஷா யோகா மையத்தில் எனது சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைபேசியில் சிலர் அழைத்தனர்.
அப்போது கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டனர். மேலும் ஈஷா யோகா மையத்திற்கு அவர் 3 நாட்களாக வரவில்லை என தெரிவித்திருந்தனர். இது குறித்து ஈஷோ யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓராண்டாக வழக்கு விசாரணை வேகம் எடுக்காமல் இருந்து வருகிறது.
எனவே போலீஸ் விசாரணையைத் துரிதப்படுத்தி காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டுத் தர வேண்டும். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், 'கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், இதுவரை 6 பேர் காணாமல் போய் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்று கூறினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இதுவரை 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஈஷா யோகா மைய ஊழியர்கள், தன்னார்வலர்களிடம் விசாரணை நடந்துள்ளது. ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர் என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications