Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்?
சென்னை: இன்னும் 5 நாட்கள் இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்திருந்த ட்வீட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட தீவிரமாக பெய்து வருகிறது. இதுவரை புயல் எதுவும் தாக்கவில்லை என்றாலும் வங்கக்கடலில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.
அரபிக்கடலில் உருவான தாழ்வு நிலையும் தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பரவலாக மழையை கொடுத்தது. வங்கக்கடலில் இரண்டு வாரங்களுக்கு முன் முதல் தாழ்வு நிலை உருவானது.

தாழ்வு நிலை
இது தாழ்வு பகுதியாக உருவெடுத்து சென்னை அருகே காரைக்கல் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இதனால் சென்னையில் மிக கனமழை பெய்தது. அதேபோல் வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்னொரு பக்கம் அரபிக்கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாகவும் அந்தமான் கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக குமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து அங்கும் வெள்ளம் ஏற்பட்டது.

மீண்டும் தாழ்வு நிலை
சில நாட்களுக்கு முன் அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கும் புதுச்சேரிக்கு இடையில் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது சென்னையிலும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. வட தமிழக கடலோரப் பகுதியில் இது தாழ்வு பகுதியாக வலிமை இழந்து நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை
அதேபோல் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் இப்போதைக்கு மழை மொத்தமாக விட வாய்ப்பு இல்லை. அங்கும், இங்கும் பெய்து கொண்டுதான் இருக்கும்.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள ட்வீட்டில், இன்னும் 5 நாட்கள் இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலர் அவரின் ட்வீட்டில், இன்னும் 5 நாளில் புதிய புயல் சின்னம் உருவாகிறதா , தாழ்வு நிலை உருவாகிறதா, அல்லது வேறு எதுவும் வானிலை மாற்றம் நடக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

விளக்கம்
இதையடுத்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த விளக்கத்தில், தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களில் மழை மீண்டும் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 26ம் தேதி மழை தொடங்கும். மொத்தம் 4 நாட்களுக்கு 29 வரை மழை நீடிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மழை
அதோடு நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரை உள்ள மண்டலத்தில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாட்களில் மீண்டும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய உள்ளது. ஏற்கனவே மழை காரணமாக ஏரிகள், ஆறுகள் நிரம்பி வழியும் நிலையில் மீண்டும் மழை வர உள்ளதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications