அடுக்குமாடி வீடுகளுக்கு அறிவிப்பு.. மின் மீட்டர்களில் வருது மாற்றம்.. மின்சார வாரியம் போட்ட உத்தரவு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் தமிழக மின்வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இப்போதும் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
பொதுவாக, அடுக்குமாடி கட்டிடங்களில் கரண்ட் மீட்டர்கள், ஸ்விட்ச் பாக்ஸ்கள் என அனைத்துமே, தரைதளத்தில் அமைப்பது வழக்கம்.. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக மின் இணைப்பு இருக்கும் என்றாலும், இதற்கென்றே பிரத்யேகமான இடம் ஒதுக்கப்பட்டு, அங்கிருந்தே ஒட்டுமொத்த அப்பார்ட்மென்ட்களுக்கும், மின்வழங்கல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில், புதிதாக வீடுகள் கட்டப்படுமானால், மின்சார இணைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. அதேபோல, ஒரே இடத்தில நூற்றுக்கணக்கான மின் இணைப்புகளுக்கான மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் பொருத்தப்படுவது வேறு சில சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புகள்: குறிப்பாக, அடுக்குமாடி கட்டிடங்களில் பெரிய அளவில் தீ விபத்து கூட ஏற்படுகின்றன. மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரேஇடத்தில் அதிக எண்ணிக்கையிலான மீட்டர்கள்மற்றும் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைத்ததே இந்த தீ விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இதற்கு பிறகுதான், தேசிய மின் ஆய்வு ஆணையம், 49 அடி அதாவது 5 மாடிகள், அதற்கு மேற்பட்ட கட்டடங்களில், ஒரே இடத்தில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்களை வைக்க கூடாது என்றும், ஒவ்வொரு தளத்திலும் மின் மீட்டர்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியம்: இது தொடர்பாக, மின் ஆய்வுத் துறைபிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது: "அடுக்குமாடி கட்டிடங்களில் ஒவ்வொரு தளத்திலும் "பஸ்பார் டிரங்கிங்" முறையில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர்களை அமைக்க வேண்டும் என தேசிய மின் ஆய்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக உயரமுடைய அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டுவோர் இந்தப் புதியநடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.பொது கட்டிட விதிகளின்படி, தமிழகத்தில் 60 அடிஉயரம் அதாவது, 6 மாடிக்கு மேற்பட்டவை அடுக்குமாடி கட்டிடங்களாக வகைப் படுத்தப்படுகின்றன. ஆனால், தேசிய கட்டிட விதிகளின்படி, 49 மீட்டர் அதாவது 5 மாடிக்கு மேற்பட்ட கட்டிடங்களே அடுக்குமாடிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
அனுமதி: எனவே, 49 அடிக்கு மேற்பட்ட உயரம் கொண்டகட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் மின்சார மீட்டர், மெயின் பாக்ஸ் அமைக்கப்பட வேண்டும்.இதில் ஏற்கெனவே திட்ட அனுமதி பெற்ற கட்டிடங்களை மட்டும் விடுத்து, புதிய கட்டிடங்களில் இந்த விதி அமலாக்கப்படுவது உறுதி செய்யப்படும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications