ஒற்றை ட்வீட்! கோடிக்கணக்கில் ஏலம் போக இருந்த நடராஜர் சிலை மீட்பு! கலக்கிய தமிழ்நாடு போலீஸ்
சென்னை: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்பட்டியிலிருந்து திருடப்பட்ட 500 ஆண்டுக்கால பழமையான சிலையை ஏலம் விடுவதற்கு தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஏலத்தை ரத்து செய்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் அமைந்திருக்கிறது 'ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வரர் கோயில்'. இக்கோயில் 15-16 நூற்றாண்டில் அப்பகுதியில் குறுநில மன்னராக இருந்த வெட்டும்பெருமாள் ராஜா என்பவரால் உருவாக்கப்பட்டது.
இக்கோயிலில் ஐம்பொன்னால் ஆன பல சிற்பங்கள் இருந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் அதில் பல சிற்பங்கள் காணாமல் போய்விட்டன.

500 ஆண்டு பழமையான சிலை
அப்படி 1972ம் ஆண்டு திருடப்பட்டதுதான் நடராஜர் சிலை. இந்த திருட்டு வழக்கு தொடர்பாக கோவில்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை யார் திருடினார்கள் என்பது குறித்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் இதே போன்ற சிலை ஒன்று பிரான்ஸ் நாட்டின் christies வெப்சைட் மூலம் ஏலம் விடப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்திடம் உள்ள பழைய புகைப்படங்களுடன் இந்த நடராஜர் சிலையின் புகைப்படத்தை தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர். எதிர்பார்த்ததைப் போலவே இந்த இரண்டு படங்களும் ஒத்து போயின. அதாவது 1972ம் ஆண்டு திருடப்பட்ட சிலைதான் தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது.

ஏலம்
இது தொடர்பாக மாநில அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் இந்த விஷயம் சம்பந்தப்பட்ட ஏல நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக இது தொடர்பான வழக்கு பதிவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஏலம் நிறுத்தப்படுவது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடைசியாக தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் ஜெயந்த் முரளி இது தொடர்பாக ஏல நிறுவனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதனையடுத்து ஏலம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றை ட்வீட்
ஜெயந்த் முரளி தனது ட்வீட்டில், "நடராஜர் சிலையை ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சிலையை திருப்பி கொடுத்துவிடுங்கள். அது இந்தியாவிலிருந்து திருடப்பட்டது" என்று கூறியுள்ளார். இதனையடுத்து christies வெப்சைட் இந்திய தூதரகத்திடம் ஏலத்தை நிறுத்துவதாகவும், இந்த சிலையை ஏலத்திற்கு கொண்டு வந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தருவதாகவும் கூறியுள்ளது. ஒரு வேளை இந்த சிலைகள் ஏலத்தில் விற்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் ரூ.1.76 கோடி முதல் ரூ.2.64 கோடி வரை விலை போயிருக்கும் என்று சிலைத்தடுப்பு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

யுனெஸ்கோ ஒப்பந்தம்
இந்த சம்பவம் தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி ஜெயந்த் முரளி கூறுகையில், "இவ்வாறு ஏலத்தில் விடப்படும் பழங்கால பொருட்கள் திருடப்பட்டிருப்பின் அதனை உரிமை கோரும் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 'யுனெஸ்கோ' பாரம்பரிய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தின்படி இச்சிலை இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இச்சிலையை ஏலத்தில் விட்டவர்களை கண்டுபிடிப்பது என்பது கடினமான பணியாகும்" என்று கூறியுள்ளார். தமிழக காவல்துறையினர் மூலமாக சர்வதேச சந்தையில் ஏலத்தில் விடப்பட இருந்த பழங்கால சிலை ஒன்று விற்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications