சென்னையில் சொத்து, சொந்த வீடு வைத்திருப்போருக்கு மாநகராட்சி நல்ல செய்தி.. என்னது இத்தனை கோடியா?
சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை சொத்து வரி செலுத்தாதவர்கள் வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது..
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியான சென்னையின் முக்கிய வருவாய் என்றால் அது சொத்து வரிதான்... சென்னையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில், இங்கு ஏராளமானவர்களுக்கு சொத்துக்கள் உள்ளன. சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கிறார்கள். இவர்கள் மூலம் கடந்த நிதியாண்டில் சுமார் 1800 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வசூலிக்கும் சொத்து வரி பணத்தில் தான், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்கிறது.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்துவார்கள். இதில் கடந்த நிதியாண்டில் ரூ.1700 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் இலக்கு வைத்து செயல்பட்டது.
இந்த இலக்கை அடைய கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வீடு வீடாகச்சென்றும் வரி வசூல் செய்து வந்து வந்தார். குடியிருப்பு சங்கங்கள் உதவியுடன் சிறப்பு வரி வசூல் முகாம்களையும் மாநகராட்சி தீவிரமாக நடத்தியது. தேர்தல் பணிகள் நடந்தாலும் சொத்துவரி வசூல் பணிகளையும் மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 1200 கோடி என்கிற அளவில் வரி வசூல் ஆகி இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் 600 கோடி அளவிற்கு உயர்ந்தது.
குறிப்பாக கடந்த மார்ச் 29 முதல் மார்ச் 31-ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை நாட்கள் என்கிற நிலையில், சொத்து வரி வசூல் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன்படி ஏப்ரல் 1ம் தேதி பிறக்கும் முன்பு வரை அதாவது, மார்ச் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வரி வசூலிக்கும் பணி நடந்தது.
இதன் காரணமாக கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடியே 20 லட்சம் அதிகம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சொத்துவரி 1800 கோடி என்கிற நிலையில், சென்னையில் தொழில் வரியாக கடந்த நிதியாண்டில் ரூ.533 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டை விட ரூ.10 கோடியே 71 லட்சம் அதிகமாக இந்த நிதியாண்டில் வசூல் ஆகி உள்ளது.
இதனிடையே நடப்பு அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால், அதில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேநேரம் அதன் பிறகு செலுத்தப்படும் சொத்து வரி, 1 சதவீதம் அபராதத்துடன் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டுமல்ல, கோவை, தாம்பரம், ஆவடி, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் வரி வசூல் நடவடிக்கையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications