இந்தியர்களுக்கு அடிச்சது யோகம்.. அமெரிக்கா ஆப்பு வச்சா என்ன? சரியான நேரத்தில் தோள் கொடுத்த ரஷ்யா!
சென்னை: இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு செல்லும் விசா விதிமுறைகளை மிகக் கடுமையாக்கிறார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இந்தியா-ரஷ்யா இடையே வரலாற்று சிறப்புமிக்க வேலைவாய்ப்பு ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவின் பல்வேறு தொழில்துறைகளில் 70,000 இந்தியர்கள் அதிகாரப்பூர்வமாக வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.
தற்போது ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், திறமையான தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அந்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, ரஷ்ய தொழிலாளர் அமைச்சகம் இந்தியாவுடன் இணைந்து ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

அதன்படி இந்தியா -ரஷ்யா ஒப்பந்தம் கையொப்பமாகியதும், ரஷ்யாவில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு மற்றும் நியாயமான ஊதியம் கிடைக்கும் வகையில் ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும். மேலும், இந்த ஒப்பந்தம் புதிய பணியாளர்களின் சட்டபூர்வ இடம்பெயர்வு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு என்பவற்றையும் உறுதி செய்கிறது.
இந்தியா - ரஷ்யா வேலை
ரஷ்யாவில் தற்போது நடைபெறும் முக்கியத் தொழில்துறைகள், கட்டுமானம், பொறியியல், மின்னணுவியல், ஜவுளி போன்ற துறைகளில் இந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாஸ்கோவில் செயல்படும் இந்திய வணிகக் கூட்டமைப்பு (IBA) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளதோடு, இந்தியா-ரஷ்யா உறவுகளை புதிய உச்சிக்குக் கொண்டு செல்லும் மைல்கல் என்று பாராட்டியுள்ளது.
புதின் இந்தியா வருகை
மேலும், இந்திய தொழிலாளர்கள் சட்டமீறிய வழிகளால் பணியமர்த்தப்படுவதைத் தவிர்க்க, அரசு மட்டத்திலும் தொழிலாளர் சங்கங்களுடனும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து IBA தலைவர் ஷம்மி மனோஜ் பேசுகையில், "இந்தியா உலகிலேயே மிகுந்த திறமை கொண்ட பணியாளர்களைக் கொண்ட நாடு. அதே சமயம், ரஷியா ஒரு பெரிய தொழில்துறை மாற்றத்தின் கட்டத்தை கடந்து வருகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது ரஷியாவுக்கு திறமையான மனிதவளத்தை வழங்குவதோடு, இந்தியர்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான வேலைவாய்ப்பையும் உறுதி செய்கிறது." என்றார்.
திறமையான தொழிலாளர்கள்
இந்த ஒப்பந்தம் முடிந்தது, இந்திய தொழிலாளர்கள் ரஷ்யாவுக்குப் பயணிப்பதற்கு முன் அவர்களுக்கு பயிற்சி மற்றும் மொழிப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். அத்துடன், நியாயமான ஆள்சேர்ப்பு வழிமுறைகள் மற்றும் நெறிமுறை அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய, இரு நாடுகளின் அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இது இந்தியா-ரஷ்யா உறவுகளுக்கு புதிய அத்யாயத்தை ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
தொழிலாளர் பாதுகாப்பு
இந்த முயற்சி வெற்றியடைந்தால், அடுத்த கட்டத்தில் மேலும் பல இந்திய நிபுணர்கள் ரஷ்ய தொழில்துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் இளைஞர்களை காப்பாற்றுவதாக கூறி அங்கு பணிபுரியும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக்கியுள்ளார். இதை அடுத்து இந்திய தொழில் நுட்பத் துறையினரை கவர சீனாவும் முயன்று வருகிறது. தற்போது ரஷ்யாவும் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன் வந்திருப்பது உலக அளவில் இது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications