பயணங்கள் மீதான காதல்! அரை வயிற்றுக்கு சாப்பாடு! முதல்வர் ஸ்டாலின் பற்றிய 70 ருசிகரத் தகவல்கள்!
ஸ்டாலின் குறித்த 70 சுவாரஸ்யமான தகவல்கள்.
சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த 70 தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பயணங்கள் மீதான காதல், பள்ளியில் அடக்கமான மாணவன், ஊர் ஊராக நாடகம் என ஸ்டாலின் பற்றிய ருசிகர தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு;

ஊர் ஊராக நாடகம்
1) மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் அதீத ஈடுபாடு ஏற்பட்டது.
2) பள்ளிபடிக்கும் போதே தனக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கட்சிப் பணிகள் மேற்கொண்டார் ஸ்டாலின்.
3) பொதுப்பணித்துறை அமைச்சர் மகன் என்பதே தெரியாத அளவுக்கு படிக்கும் காலத்தில் பள்ளியில் அடக்கம்.
4) கருணாநிதி அழைக்காமலேயே அரசியலுக்கு தாமாக விரும்பி வந்தவர் ஸ்டாலின்.
5) திமுகவுக்காக ஊர் ஊராக சென்று உதயசூரியன் என்ற பெயரில் நாடகம் நடத்தி பிரச்சாரம் செய்தார்.
6) திருமணம் முடித்த 6 மாதங்களில் மிசா சிறைவாசியானார்.
7) தாம் பகுத்தறிவுவாதியாக இருப்பினும் மனைவி கோவிலுக்கு செல்வதற்கு எந்த தடையும் போடாதவர் ஸ்டாலின்.
8) சென்னை மேயராவதற்கு முன்பு வரை தனது காருக்கு ஓட்டுநர் வைத்துக் கொள்ளாமல் தாமே தனது காரை ஓட்டினார்
9) எப்போதும் கூச்ச சுபாவம் உடைய ஸ்டாலின், மேயராகிய பின்பு தான் கூச்சத்தை நீக்கி பொதுவிடங்களில் பேச துணிந்தார்.
10) மேயராக இருந்த காலத்தில் அதிகாலையிலேயே சென்னையை ஒரு ரவுண்டு அடித்துவிடுவார்.

பயணங்கள் மீதான காதல்
11) ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் பலர் திணறினர்.
12) கட்சியில் இளைஞரணியை மிக ஆக்டிவாக வைத்து திமுகவின் பிரதான அணியாக வளர்த்தெடுத்துள்ளார்.
13) ஸ்டாலினை பொறுத்தவரை பயணம் செல்வதற்கு துளியும் சலிக்க மாட்டார்.
14) வெளியூர் சுற்றுப்பயணங்களின் போது கட்சியினரை, மக்களை சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்.
15) கட்சி நிர்வாகிகளுக்கு திடீர் போன் அடித்து சர்ப்ரைஸ் தருவார்.
16)துணை முதல்வராக இருந்த காலத்தில் தினமும் காலை ஒரு மணி நேரம் கட்டாயம் பொதுமக்களை சந்தித்துவிட்டு தான் கோட்டைக்கு புறப்படுவார்.
17) மதிய நேரத்தில் அரை மணி நேரம் மட்டும் உறங்கி ஓய்வெடுப்பார்.
18) வெளியூர் கட்சி நிர்வாகிகள் மரணம் அடைந்தால், அந்த மாவட்டத்திற்கு செல்லும் போது இறந்தவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவார்.
19) வெளியூர் செல்லும் போது ஹோட்டல் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து, நிர்வாகிகள் இல்லங்களில் இருந்து வரும் உணவுகளையே சாப்பிடுவார்.
20) விமான பயணத்தை தவிர்த்து, ரயில் மற்றும் காரில் தரைவழி பயணத்தை அதிகம் விரும்புவர்.

பேரன் பேத்தியோடு டூர்
21) இளைஞரணி செயலாளராக இருந்தபோது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து கட்சி கொடி ஏற்றினார்.
22) இளைஞரணிக்கு என வெள்ளை பேண்ட் வெள்ளை சர்ட் என்ற சீருடை முறையை கொண்டுவந்தார்.
23) வி.பி.சிங் பிரதமராக இருந்த போது ஸ்டாலினின் கட்சி செயல்பாட்டையும், ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார்.
24)அமெரிக்கா, துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான்,லண்டன், உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
25) ஆண்டுதோறும் மே மாதம் கோடை காலம் வந்துவிட்டால் தனது பேரன், பேத்திகளோடு குறைந்தபட்சம் 2 நாட்களாவது ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்.
26) பல டென்ஷன்கள், பிரச்சனைகள் இருப்பினும் வீட்டிற்கு சென்றுவிட்டால் பேரன், பேத்திகளுக்கு சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்புவார்.
27) தனது மகன் உதயநிதி ஸ்டாலின் காதல் திருமணத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு நடத்தி வைத்தார்.
28) மகன், மகள் மீது பாசம் வைத்திருப்பதை போலவே மருமகள் கிருத்திகா மீதும், மருமகன் சபரீசன் மீதும் ஸ்டாலின் அதிகம் பாசம் காட்டுவார்.
29) தனது பேரன் பேத்திகளுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளதோடு கட்சி நிர்வாகிகளிடமும் தமிழ் பெயர் சூட்ட வலியுறுத்துவார்.
30) கட்சியில் சீனியர்களுக்கு மரியாதை தரும் விவகாரத்தில் கவனமாக இருப்பார்.

அரை வயிற்றுக்கு சாப்பாடு
31) மு.க.ஸ்டாலின் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். தொடக்ககாலத்தில் அவரை அழைத்து சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் ஸ்டாலின்.
32) உணவை பொறுத்தவரை ருசிக்கு சாப்பிடுவதை விட பசிக்கு சாப்பிடக்கூடியவர்.
33) டைனிங் டேபிளில் பசியோடு அமர்ந்து பசியோடு எழுந்துவிடுவேன் என்று அவரே பலமுறை கூறியுள்ளார்.
34) சென்னையில் இருந்தாலும், வெளியூர்களுக்கு சென்றாலும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கமாட்டார்.
35) தினமும் சென்னை ஐஐடி வளாகத்தில் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார்.
36) நவீன காலத்திற்கேற்ப பேஸ்புக், ட்வீட்டர், உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இயங்கி வருகிறார்.
37) தொடக்கத்தில் கொஞ்சம் முன் கோபம் கொண்டவராக திகழ்ந்த ஸ்டாலின் இப்போது பக்குவப்பட்ட முறையில் அரசியலை கையாள்கிறார்.
38) கருணாநிதியே தயங்கிய சில விவகாரங்களை கூட ஸ்டாலின் துணிந்து கையாண்டிருக்கிறார்.
39) துணை முதல்வராக இருந்தபோது மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து ஸ்டாலின் சுழல் நிதி கொடுத்தார்.
40) மேடையில் பல மணி நேரங்கள் வரை நின்று, தனது கையாலேயே அனைத்து பயனாளிகளுக்கும் நலத் திட்டஉதவிகள் வழங்குவார்.

கூட்டுக்குடும்பம்
41) தேர்தல் பிரச்சார காலங்களில் ஒரு மாதம் வரை கூட வீட்டுக்கு செல்லாமல் தொடர் சுற்றுப்பயணம் செய்வார்.
42) தன் மீதான மிஸ்டர் கிளீன் இமேஜை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டுகிறார்.
43) அதிகாரிகளை தேர்வு செய்து பணிகளை ஒதுக்குவதில் ஒன்றுக்கு பல முறை யோசனை செய்வார்.
44) எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், முதலமைச்சர் என ஆட்சி நிர்வாகத்தில் படிபடியாக வளர்ந்தார்.
45) வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியிலும் படிபடியாக வளர்ந்தார்.
46) ஸ்டாலின் மேயராகும் வரை கோபாலபுரம் இல்லத்தில் தான் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்.
47) ஒரு கட்டத்தை ஸ்டாலினை சந்திக்க அதிக பார்வையாளர்கள் வந்ததால் தனிவீட்டுக்கு குடி பெயர்ந்தார்.
48)ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
49) சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் குறிஞ்சிமலர் உள்ளிட்ட ஒன்றிரண்டு சீரியல்களிலும் ஸ்டாலின் நடித்தார்.
50) யாரிடமும் அவ்வளவு எளிதாக மனம் விட்டு பேசிவிடமாட்டார் ஸ்டாலின்.

மனதில் உள்ள ரகசியம்
51) ஸ்டாலினின் மன ஓட்டம் என்னவென்பதை குடும்பத்தினரால் கூட அறிய முடியாது.
52)தனது அக்காவான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர் ஸ்டாலின்.
53) ஸ்டாலினுக்கும் -அழகிரிக்கும் ஒரு காலத்தில் இணைப்பு பாலமாக இருந்தவரும் இந்த முரசொலி செல்வம் தான்.
54) குடும்ப உறவினர்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்.
55) கருணாநிதி பாணியில் கட்சியினருக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றுபவர்.
56) கடும் பணிச்சுமைக்கு மத்தியிலும் அடிக்கடி கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளின் உடல்நலனை கவனித்துக் கொள்கிறார்.
57) கூட்டணிக் கட்சித் தலைவர்களை தனது தந்தை கருணாநிதி பாணியில் அனுகி வருகிறார்.
58) ஸ்டாலினை தேசியத் தலைவராக முன்னிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
59) முன்கோபம், அவசரம், உள்ளிட்டவற்றை தூக்கி யெறிந்துவிட்டு பக்குவமான முறையில் அரசியல்.
60) நேரெதிர் அரசியல் செய்யும் அதிமுகவினர் கூட ஸ்டாலினின் செயல்பாடுகளை வெளிப்படையாக பாராட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் ரசிக்கும் சூழல்.

தள்ளி போடக் கூடாது
61) ஆளுநருக்கு எதிராக அவர் கொடுக்கும் குரல் தேசியளவில் அவரை திரும்பி பார்க்க வைக்கிறது.
62) பாஜக தலைவர்களில் வாஜ்பாய் மீது ஸ்டாலின் இன்றளவும் தனிப்பெரும் மரியாதை வைத்திருப்பவர்.
63) கடந்த 2016-ல் தமிழகம் அதுவரை பார்த்திராத ஸ்டாலினை பார்த்தது. பேண்ட் ஷர்ட் சகிதம் அவர் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
64) திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காலத்தில் கூட கட்சியையும், நிர்வாகிகளையும் சலசலப்பின்றி வழி நடத்தி வந்தார்.
65) கருணாநிதியை போல் தன்னிடமும் போர்க்குணம் உள்ளது என்பதை அவ்வப்போது நிரூபிக்கத் தவறாதவர் ஸ்டாலின்.
66) நீட் தேர்விலிருந்து எப்படியாவது விலக்கு பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அவர் அதற்கான அரசியல் காய் நகர்த்தல்களை ஆரம்பித்துவிட்டார்.
67) எந்தக் காரியத்தை செய்தாலும் அதை தள்ளிப் போடாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுபவர் ஸ்டாலின்.
68) திராவிட மாடல் ஆட்சி என்ற முழக்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்கிறார்.
69) கார்களில் பயணிக்கும் போது மூத்த அமைச்சர்களுடன் பேசிக்கொண்டே செல்லும் வழக்கம் கொண்டவர்.
70) கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக ஆய்வுக்கு செல்கிறார்.












Click it and Unblock the Notifications