"30 நாட்களில் தமிழ்நாடு வரும் 76 அமைச்சர்கள்" பாஜகவின் திட்டம் என்ன? அண்ணாமலை சொன்ன வார்த்தை!
சென்னை: மத்திய அரசின் நலத் திட்டம் மக்களுக்கு செல்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக 30 நாட்களில் 76 அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து திட்டங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கேபி முனுசாமி கூறுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அன்றைய ஆட்சியாளர்கள் இவ்வளவு கீழே இறங்கி வரவில்லை. அன்று மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வந்துகொண்டுதான் இருந்தன. அப்படி வந்தபோதும்கூட, அந்த மாநில ஆட்சியாளர்கள் தாங்கள் செய்வது போல காட்டிக் கொள்வார்கள்.

சென்னை வந்த பியூஷ் கோயல்
ஆனால் அதை பற்றி மத்தியிலே ஆட்சியில் இருப்பவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள். ஆனால், இப்போது பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல திட்டங்களை நாங்கள்தான் கொண்டு என்று வந்தோம் என்று சொல்கிறார்கள். அது அவ்வளவு ஆரோக்கியமான செயல் இல்லை என்றே நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

அண்ணாமலை பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், தொழில் வளர்ச்சியில் 7 சதவிகிதத்திற்கு அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதற்கு அமைச்சர் பியூஷ் கோயல் தான் காரணம். பிரதமர் மோடியின் கனவை நினைவாற்றும் அமைச்சர் பியூஷ் கோயல். இப்போது பலரும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு அதிகம் வருவதற்கான காரணம் என்ன என்று கேட்கிறார்கள்.

30 நாட்கள், 76 அமைச்சர்கள்
அதற்கு, மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டிற்கு சென்று மத்திய அரசு பயனாளிகளை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றுள்ளதா என்று கண்காணிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்தில் மட்டும் 76 அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளனர். இதுவரை 19 அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இன்னும் 50 அமைச்சர்கள் வரவுள்ளனர். மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகளை சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசின் திட்டங்கள்
அதேபோல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளிலும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் விபத்து காப்பீடு, மத்திய அரசின் ஆயுள் காப்பீடு, மத்திய அரசு மருத்துவ காப்பீடு, தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல்முறை
இந்திய வரலாற்றில் மத்திய அமைச்சர்களை அனைவரையும் 30 நாட்களில் ஒரே மாநிலத்திற்கு எந்த அரசும் அனுப்பியதில்லை. முதல்முறையாக ஒரே மாதத்தில் 76 அமைச்சர்கள் தமிழகம் வருகிறார்கள். இதேபோல் கோவையில் ஸ்மிருதி இராணி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications