76ஆவது குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். இந்த விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த முறை அங்கு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக குடியரசு தின விழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை பகுதியில் பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்பட்டன. இங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த விழா நடக்கும் பகுதிக்கு காலை 7.52 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அவரது காரின் முன்னும் பின்னும் மோட்டார் சைக்கிள்களில் போலீஸார் புடைச் சூழ வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து முதல்வரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை விமான படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைச்சூழ அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து 7.58 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிறகு காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அருகில் முதல்வர் ஸ்டாலின் இருந்தார். பிறகு உயர பறந்த தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர். அப்போது அங்கு இந்திய விமான படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர்களை தூவியது. அந்த நேரத்தில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கடற்படை, வான்படை, கடலோர படை ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
காவல் துறையினர் அணிவகுப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை முதல்வர் வழங்குகிறார்.
இந்த விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் சிஆர்பிஎஃப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். அது போல் ரயில் தண்டவாளங்களில் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. மேலும் மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகங்களிலும் போலீஸார் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications