தமிழகத்தில் டெங்கு பாதிப்பு! இதுவரை 8 பேர் பலி.. 20,000+ பேருக்கு பாதிப்பு! சுகாதார துறை ஷாக் தகவல்
சென்னை: பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவும். கொசுக்களால் பரவும் இந்த டெங்கு பாதிப்பால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பரவும் மிக மோசமான ஒரு நோய்ப் பாதிப்பாக டெங்கு இருக்கிறது. கொசுக்களால் பரவும் இந்த டெங்கு நோயால் உயிரிழப்புகள் கூட ஏற்படும்.

இதற்கிடையே இந்தாண்டு டெங்குவால் தமிழ்நாட்டில் இதுவரை 20,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறை: இது தொடர்பாகத் தமிழ்நாடு சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் பலியாகினர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும்.
டெங்கு: டெங்கு பரவுவதைத் தடுக்கவும், டெங்கு தொடர்பான இறப்புகளை மேலும் குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த தீவிர நடவடிக்கைகளால், டெங்கு இறப்பு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2022ல் 30,425 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. கடந்த 2023ம் ஆண்டில் இது 24,401ஆக குறைந்தது. இந்தாண்டு (மே 5) வரை 20,138 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பைக் கண்காணிப்பதில் அரசு விழிப்புடன் உள்ளது, மேலும் பின்வரும் முக்கிய நடவடிக்கைகளுடன் மாநிலத்தில் மேலும் பாதிப்புகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, தடுக்கவும் அரசு தயார் நிலையின் உள்ளது.
24/7 காய்ச்சல் சிகிச்சை மையங்கள்: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.
தினசரி காய்ச்சல் கண்காணிப்பு: 4,031 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நோய் கண்காணிப்பு அறிக்கைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மருத்துவ முகாம்கள்: நடமாடும் மருத்துவக் குழுக்கள் 23,689 முகாம்களை நடத்தி, நவம்பர் 5, 2024 நிலவரப்படி 13,18,349 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். வெளிநோயாளிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.
காய்ச்சல் நோயாளிகளுக்கான ஆய்வக சோதனை: டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை மையங்கள் 35ல் இருந்து 4,031 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிர கொசு கட்டுப்பாடு: புகை தெளித்தல், கொசு புழு கட்டுப்பாடு, கொசு அடர்த்தி கண்காணிப்பு மற்றும் வைரஸ் ஆன்டிஜெனைக் கண்டறிய கொசு பகுப்பாய்வு ஆகியவை மாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. கொசுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் - பைரெத்ரம், டெமிஃபோஸ் மற்றும் மாலத்தியான் ஆகியவை போதிய அளவில் கையிருப்பு உள்ளது.
அதிவிரைவு குழுக்கள்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் அதிவிரைவு குழுக்களை வழிநடத்துகின்றனர்.
வீடு தோறும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்துதல்: நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு தடுப்புக்காக தினமும் 25,000 DBC பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
போதிய மருத்துவப் பொருள்கள்: டெங்கு மேலாண்மைக்கு தேவையான மருந்துகள், ரத்தம் மற்றும் பிளேட்லெட் ஏற்றுதல் மற்றும் பரிசோதனை நுகர்பொருட்கள் மருத்துவமனைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பொது விழிப்புணர்வு முயற்சிகள்: டெங்கு மற்றும் பிற தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பல்துறைசார் ஒருங்கிணைப்பு: அனைத்து துறைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்ககம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, நகர்ப்புற ஊரக இயக்ககம் , ஊரக மற்றும் பஞ்சாயத்து துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS), பள்ளி/கல்லூரி கல்வி மற்றும் இந்திய மருத்துவ முறை ஆகியவை டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்திட தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள்: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர், மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் வாராந்திர ஆய்வுகளை நடத்தி டெங்கு பாதிப்பு தடுப்பதை பற்றிய முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் செய்கிறார்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசின் தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சலால் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், மேலும் மாநிலம் முழுவதும் பரவும், தொற்று நோய்கள் பரவாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications