மனைவி மீது 80 வழக்குகள்.. வக்கீல் கணவரின் மாஸ்டர் பிளான்.. சுப்ரீம் கோர்ட் மரண அடி! ரூ.5 கோடி எதற்கு
சென்னை: மும்பையை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த கசப்பான சட்டப் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மனைவிக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்த கணவரின் செயலைக் கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், அவர்களுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மனைவிக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்த தம்பதியினருக்கு 2010-ல் திருமணம் நடந்து, இரண்டு மகன்கள் உள்ளனர்.. ஆனால் 2016 முதல் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர்.

மனைவி தனது வாழ்வாதாரத்திற்காக பராமரிப்புத் தொகை கேட்டு நீதிமன்றம் சென்றார்.. இதில் ஆத்திரமடைந்த கணவர், பழிவாங்கும் நோக்கில் தனது மனைவி, அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவியின் வழக்கறிஞர் என அனைவர் மீதும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 80-க்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்தார்.
ஒரு வழக்கறிஞராக இருந்துகொண்டே சட்டத்தை தவறாக பயன்படுத்தி 10 ஆண்டுகளாக மனைவியைத் துன்புறுத்தி வந்ததால், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குச் சென்றது..
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. அப்போது, கணவர் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தும், மனைவிக்குப் பணம் தருவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தனது பதவிகளை வேண்டுமென்றே ராஜினாமா செய்ததை நீதிபதிகள் கண்டுபிடித்தனர்..
மனைவி நன்கு படித்தவர் என்பதால், கணவர் தனது கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.. மனைவியைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 80 வழக்குகளைத் தொடர்ந்த கணவரின் செயலை "கடுமையான துன்புறுத்தல்" என்று நீதிபதிகள் சாடினர்..
அதிரடித் தீர்ப்பு தந்த கோர்ட்
இந்தத் திருமண உறவை இனி மீட்டெடுக்க முடியாது என்பதை உணர்ந்த நீதிபதிகள், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சிறப்புத் தீர்ப்பை வழங்கினர்.. அதன்படி, தம்பதியினருக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்பட்டது..
அடுத்த ஒரு ஆண்டுக்குள் மனைவிக்கு 5 கோடி ரூபாய் பராமரிப்புத் தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்தத் தொகை கிடைத்த 2 வாரங்களுக்குள், தற்போது வசித்து வரும் மாமனார் வீட்டை மனைவி காலி செய்ய வேண்டும்.. மேலும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த 80 வழக்குகளும் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டன..
கணவர் உறுதிமொழி
இனி வரும் காலங்களில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்த வழக்கையும் தொடர மாட்டேன் என்று கணவர் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டும்.. இரண்டு மகன்களும் தாயின் பாதுகாப்பிலேயே வளர்வார்கள் என்றும், அதே சமயம் தந்தை தனது மகன்களைச் சந்திக்க அனுமதி உண்டு என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சட்டப் போராட்டங்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி மனைவியை அலைக்கழித்த கணவருக்கு, 5 கோடி ரூபாய் அபராதம் மற்றும் அனைத்து வழக்குகளும் ரத்து என்ற இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது..












Click it and Unblock the Notifications