தீய திராவிட மாடல்..திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு! கண் சிவந்த சீமான்.. பின்னணியில் மெகா காரணம்
சென்னை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் ஆசிரியர் மற்றும் சக மாணவனை எட்டாம் வகுப்பு மாணவன் வெட்டிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் எனவும், திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே இதற்கு தீர்வாகும் என கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வஉசி மைதானம் அருகே இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பாட ஆசிரியை ரேவதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால ஆத்திரமடைந்த ஒரு மாணவன் தனது பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மற்றொரு மாணவனை சரமாரியாக வெட்டினார். அதில் கை தோள்பட்டை முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்து நிலையில் தடுக்க முயன்ற ஆசிரியையையும் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு, தீய திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வாகும் என கூறியுள்ளார் சீமான். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள், கத்தி போன்ற கொடூர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வரும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும், சமூகமும் சீர்கெட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான புகார்களும், பள்ளி மாணவ-மாணவியர் மது அருந்தும் காணொளிகளும், மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் செய்திகளும் வராத நாட்களே இல்லை என்ற அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
அறிவைச் செறிவாக்கி, நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் கற்பித்து நல்லதொரு தலைமுறையை வளர்த்தெடுத்து நாட்டிற்கு அளிக்கும் பெரும்பணி புரியும் பள்ளிக்கூடங்கள், திமுக ஆட்சியில் மது போதை விற்பனையகங்களாகவும் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாகவும் மாறி நிற்பதுதான் ஏற்கவே முடியாத காலக்கொடுமையாகும்.
சட்டம்-ஒழுங்கைக் கட்டி காக்க திறனற்ற திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமும் குற்றச்சமூகமாகச் சீர்கெட்டு நிற்பதன் சமகாலச் சான்றுகளில் ஒன்றுதான் தற்போது பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் மற்றும் ஆசிரியர் மீது நடைபெற்றுள்ள கொலைவெறித் தாக்குதலாகும். தீய திராவிட மாடல் ஆட்சியை அகற்றுவது ஒன்றே நாட்டில் நாள்தோறும் நடைபெறும் கொடுமைகள் அனைத்தையும் தடுப்பதற்கான சரியான தீர்வாகும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications