60 வயதாகும் உறவினருக்கு 69 வருடமாக செந்தில் பாலாஜியை எப்படி தெரியும்? நீதிபதி எழுப்பிய சந்தேகம்
சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். முன்னதாக ஜாமீன் நிபந்தனையாக இரு நபர் ஜாமீன் உத்தரவாதங்களில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி கூறியிருந்தார். அதாவது 60 வயதாகும் உறவினர் ஒருவர், 69 வருடமாக செந்தில் பாலாஜியை தெரியும் என்று எப்படி கூற முடியும் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்து வந்தன. ஜாமீனை பொறுத்தவரை மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் கிடையாது. அதேநேரம் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் செந்தில் பாலாஜி மேற்கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தால் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இந்த ஜாமீனை பெறுவதற்கு ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற ஜாமீன் தீர்ப்பை சுட்டிக்காட்டினார். அதையடுத்து, உச்சநீதிமன்ற ஜாமீன் நகல் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், நீதிமன்ற காவல் நீட்டிப்பு உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, வழக்கு இன்று பிற்பகலில் விசாரிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், "60 வயதாகும் உறவினர் ஒருவர், 69 வருடமாக செந்தில் பாலாஜியை தெரியும் என்று எப்படி கூற முடியும்" என கேள்வி எழுப்பினார்.மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாகவும். பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றும் ஜாமீன் உத்தரவாதங்களை அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்யுங்கள் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜி தரப்பிடம் தெரிவித்தார். நீதிபதியின் இந்த முடிவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக்கூடாது என முடிவு செய்துவிட்டதைப் போல செயல்படுகிறீர்கள் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
பிணை உத்தரவாதத்தை ஏற்க நீதிபதி கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கறிஞரை அழைத்து வருகிறோம் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை அழைத்து வர உத்தரவிட்டு, வழக்கை சிறிது நேரத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்தார். அப்போது செந்தில் பாலாஜிக்கு அவரது 2 உறவினர்கள் வழங்கிய 25 லட்ச ரூபாய்க்கான பிணை உத்தரவாதங்களை ஏற்க ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி விடுதலைக்கான பிணை உத்தரவாதங்களை ஏற்று, அவரை விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பின்னரே சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications