அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் 2 நாளில் நடக்கும் பெரிய மாற்றம்.. முதல்வர் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை சுமார் 150 மீட்டர் அகலப்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை 2 நாட்களுக்குள் 200 மீட்டர் அகலத்திற்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து தூர்வாரி அகலப்படுத்த அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அங்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ஓடும் அடையாறு ஆறு என்பது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களை கடந்து அடையாறில் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. 2015ம் ஆண்டு அடையாறு ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு அந்த ஆறு பாயும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மூன்று மாவட்டங்களிலும், வழி நெடுகிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஓரளவு கால்வாய நன்றாக இருக்கிறது. அதேபோல் அடையாற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்தால், முகத்துவாரத்தில் எந்தசிக்கலும் இல்லாமல் கலக்கும் வகையில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஆய்வு செய்தார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொண்டு 2 நாட்களுக்குள் நிறைவு செய்ய உத்தரவிட்டார்.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை சுமார் 150 மீட்டர் அகலப்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், மீண்டும் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, 200 மீட்டர் அகலத்திற்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து தூர்வாரி அகலப்படுத்த அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவின்படி, எந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, தற்போது 18 பொக்லைன் எந்திரங்களுடன் அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது
இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ. எழிலன், நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் உள்பட பல்வேறு அதிகாரிகள் வந்தனர். முன்னதாக வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
அதேபோல் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலவரம் குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications