சென்னை ஏர்போர்ட்டில் கடை திறக்க உதவிய பாஜக பிரமுகர்? 270 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் வாக்குமூலம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக யூடியூபர் சபீர் அலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் பரிசு கடை ஒன்று இலங்கை தங்கம் கடத்தல் கும்பலுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது அம்பலமாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடையின் உரிமையாளர் முகமது சபீர் அலிக்கு தங்கம் கடத்துவதற்கு உதவுவதற்காகவே அங்கு சர்வதேச தங்கக்கடத்தல் கும்பல் கடை அமைத்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தின் புறப்படும் பகுதியில் , ஏர்ஹப் என்ற பெயரில் முகமது சபீர் அலி என்பவர் பரிசு பொருள் விற்பனை கடையை நடத்தி வந்துள்ளார் . 29 வயதான முகமது சபீர் அலி ஒரு யூடியூபர் ஆவார். ஷாப்பிங் தொடர்பாக யூடியூப் சேனல் நடத்தி வந்த அவருக்கு கடை நடத்தி எந்த அனுபவமும் இல்லை.. ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடை திறந்துள்ளார்.
முகமது சபீர் அலி வைத்துள்ள கடையில் அவர் உள்பட மொத்தம் ஏழு பேர் பணியில் இருந்தனர். பொம்மைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் ஹேண்ட் பேக்குகளை விற்பனை செய்யும் கடையாக இருந்து வந்தள்ளது. இந்நிலையில் துபாயில் இருந்து ரூபாய் ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை இலங்கை பயணி ஒருவர் கடத்தி கொண்டு வந்து, சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்த போது, சுங்க அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் பரிசு பொருள் கடை பற்றி அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து பரிசு பொருள் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை பற்றி விசாரித்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இதுபோல் அடிக்கடி கடத்தல் நடந்திருக்கலாம் என சந்தேம் வந்தது. இதையடுத்து சென்று பார்த்த போது, கடையில் 1 கிலோ தங்கப் பொடியைக் கண்டுபிடித்தார்கள். அப்போது தான் அவர்களின் திட்டம் அம்பலத்திற்கு வந்தது. இதையடுத்து முகமது சபீர் அலி உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரித்த போது, யூடியூபரான முகமது சபீர் அலி இலங்கையை சேர்ந்த சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை அமைக்க லீஸ் தொகையான 70 லட்சத்தை கொடுத்தார்களாம். அதன் மூலம் கடையை திறந்த முகமது சபீர் அலி, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்களிடம் தங்கத்தை வாங்கி, விமான நிலையத்தின் வெளியே ஒப்படைத்து வந்ததாராம். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூபாய் 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதான இவர்களிடம் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) வழங்கிய அடையாள அட்டைகள் இருந்துள்ளன. இந்த அடையாள அட்டைகள் காரணமாக, அவர்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இதை வைத்துதான் தங்கத்தை பரிசு பொருள் விற்பனை கடை ஊழியர்கள் தங்கம் கடத்தலுக்கு உதவி உள்ளது தெரியவந்தது.
இதனிடைய முகமது சபீர் அலியை தீவிரமாக விசாரித்து வந்த அதிகாரிகள், அவர் கூறிய தகவல்களை கேட்டு ஆடிபோய் உள்ளார்கள்.. சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். தங்க கடத்தலுக்கு விமான நிலையத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளே உதவியதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தங்க கடத்தலுக்காகவே பரிசு பொருள் கடையை சென்னை விமான நிலையத்தில் திறந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட பரிசு பொருட்கள் கடைக்கு வாடகை முன்பணமாக ரூ.77.44 லட்சம் கொடுத்தாகவும சபீர் அலி வாக்குமூலம் கொடுத்துள்ளார். தங்க கடத்தல் வழக்கில் சபீர் அலிக்கு உதவியதாக கூறப்படும் பிருத்வியின் பின்னணி பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பரிசு பொருட்கள் கடை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லாத சபீர் அலிக்கு விவோத பிஆர்ஜி நிறுவனம் கடை நடத்த அனுமதி தந்தது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பாஜக பிரமுகர் பிருத்வியிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications