"பார்த்திபனுக்கு ஓகே.. சாமானியனுக்கு ஆபத்தா? 'சாதி-மதமற்றவர்' சான்றிதழின் கசப்பான மறுபக்கம்
சென்னை: நடிகர் பார்த்திபன் "ஜாதி, மதம் அற்றவர்" எனச் சான்றிதழ் பெற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் பார்த்திபனை பாராட்டி உள்ளது. செலிபிரிட்டியாக இது ஒரு புரட்சிகரமான முடிவாகத் தோன்றினாலும், ஒரு சராசரி சாமானியன் இதே முடிவை எடுத்தால் என்ன நடக்கும்? அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீடு என்ற பாதுகாப்பு வளையம் இதனால் உடைந்துவிடுமா? மக்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மைகளை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

பார்த்திபனுக்கு ஓகே.. நமக்கு ஏன் சிக்கல் தெரியுமா
நடிகர் பார்த்திபன் போன்ற ஒரு பிரபலம் ஏற்கனவே பொருளாதார ரீதியாகவும், சமூக அந்தஸ்து ரீதியாகவும் உச்சத்தில் இருப்பவர். அவருக்குத் இனி அரசு வேலைவாய்ப்போ, கல்வி இடஒதுக்கீடோ தேவையில்லை. ஆனால், பல தலைமுறைகளாக வறுமையில் வாடி, இப்போதுதான் கல்வியின் மூலம் முன்னேறத் துடிக்கும் ஒரு தலித் மாணவரோ அல்லது ஒரு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இளைஞரோ இந்தச் சான்றிதழை வாங்கினால், அவர் தனது பிறப்பு வழி உரிமைகளை மொத்தமாக இழக்க நேரிடும்.
இடஒதுக்கீடு: இது பிச்சை அல்ல, அது உரிமை
இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் தான் மகாத்மா காந்தி.. ஆனால் மகாத்மா காந்தியுடன் பெரும் விவாதம் செய்து, பல போராட்டங்களுக்குப் பிறகு அம்பேத்கர் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது எதற்காக? அது வெறும் பண உதவிக்காக மட்டும் அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளாக அதிகார மையங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒரு "பிரதிநிதித்துவம்" கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஒருவர் "ஜாதி இல்லை" என்று சான்றிதழ் வாங்கிவிட்டால், அவர் அரசுப் பதிவேடுகளில் "Open Category" (OC) என்ற பொதுப் பிரிவின் கீழ் வந்துவிடுவார். அதாவது, எந்தவித சலுகைகளும் இன்றி பெரும் செல்வந்தர்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுவிடும்.
75 ஆண்டுகள் ஆனாலும் மாறாத கசப்பான உண்மை
அண்ணல் அம்பேத்கர் மக்களிடையே பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்றார். சமூகத்தில் ஜாதி ரீதியான படிநிலை இருக்கும் வரை, ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுப் பிரிவினருடன் சமமாகப் போட்டியிட முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். "சமமற்றவர்களுக்கு இடையே நடத்தப்படும் சமமான போட்டி என்பது அநீதியானது" என்பதே அவர் வாதம். எனவே, சமூகப் பாகுபாடு எப்போது ஒழிகிறதோ, அன்றுதான் இடஒதுக்கீடு பற்றி மறுபரிசீலனை செய்ய முடியும் என்றார்.
அம்பேத்கர் கேட்டது என்ன
பலர் ஒரு தவறான தகவலைப் பரப்பி வருவதை பார்த்திருப்பீர்கள். "அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கே இடஒதுக்கீடு கேட்டார்" என்று. இது பாதி உண்மை. அவர் அரசியல் இடஒதுக்கீட்டிற்கு (நாடாளுமன்றம்/சட்டமன்ற தொகுதிகள்) மட்டுமே 10 ஆண்டுகள் என்ற காலக்கெடுவை முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டிற்கு அவர் எந்தக் காலக்கெடுவையும் விதிக்கவில்லை. பாகுபாடு நீங்கும் வரை அது தொடர வேண்டும் என்பதே அவர் எண்ணமாக இருந்தது.
சாதி வெறியை ஒழித்துவிட முடியாது
அரசியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு என்ற உரிமையைத் தந்துவிட்டோம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக 'ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு' என்ற நிலை வராதவரை நமது ஜனநாயகம் முழுமையடையாது என்று அம்பேத்கர் எச்சரித்தார். அவர் கூறிசென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அத்துடன் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பல கிராமங்களில் ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்வதுதான் நிதர்சனம். ஜாதியைச் சான்றிதழில் மறைப்பதன் மூலம் சமூகத்தில் உள்ள ஜாதி வெறியை ஒழித்துவிட முடியாது.
காயத்திற்கு மருந்து போடாமல், மேலே ஒரு துணியைப் போர்த்தி மறைப்பது போன்றதுதான் இந்தச் சான்றிதழ் முறை. காயம் (சமூக அநீதி) இன்னும் ஆறவில்லை என்பதே உண்மை.
நடைமுறை சிக்கல்கள் என்ன?
நீங்கள் "ஜாதி அற்றவர்" சான்றிதழ் வாங்கினால் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை கிடைக்காது. ஜாதி அடிப்படையிலான வயது வரம்பு சலுகை மற்றும் கட்-ஆப் சலுகைகள் பறிபோகும். உள்ளாட்சித் தேர்தல்களில் குறிப்பிட்ட சமூகங்களுக்கு ஒதுக்கப்படும் வார்டுகளில் நீங்கள் போட்டியிட முடியாது. முன்னேறியவர்களுக்கு இது ஒரு 'பேஷன்', பின் தங்கியவர்களுக்கு இது 'எமன்' என்றே கூறலாம்.
ஜாதி பாதுகாப்பு கவசமாக இருக்கிறது
பொருளாதார ரீதியாகப் பலமானவர்களுக்கு 'ஜாதி இல்லை' என்று சொல்வது ஒரு கெளரவ அடையாளமாக இருக்கலாம். ஆனால், இன்னும் முன்னேறாமல் விளிம்பு நிலையில் இருக்கும் பல கோடி மக்களுக்கு 'ஜாதி' என்பது ஒரு பாதுகாப்பு கவசமாகவே இருக்கிறது. இது கேட்பதற்கு கசப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறை உண்மை என்பது இதுதான். சமூகம் முழுமையாக சமத்துவம் அடையும் வரை, ஜாதி அடையாளத்தை ஒழிப்பது என்பது ஏற்கனவே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாதகமாக முடியும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
ஜாதி எப்போது சரியாகும்
அதேநேரம் பார்த்திபனின் முடிவு ஒரு தனிமனிதப் புரட்சி. ஆனால் அது சமூகப் புரட்சியாக மாற வேண்டுமானால், அதற்கு கல்விதான் ஆயுதம். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெற்று, பொருளாதாரச் சுதந்திரம் அடையும் போது, 'ஜாதி' என்ற சொல் அகராதியிலிருந்து தானாகவே நீங்கும். அதுவரை சாமானியர்களுக்கு இடஒதுக்கீடு என்பது வெறும் சலுகை அல்ல, அது ஒரு சமூக நீதிப் பாதுகாப்பு என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications