தண்டவாளத்தில் தவறிய Ear Buds.. எடுக்க சென்ற கல்லூரி மாணவர்.. திடீரென வந்த மின்சார ரயில்.. பரிதாபம்!
சென்னை: சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இயர் பட்ஸ் தவறி தண்டவாளத்தில் விழுந்ததை இறங்கி தேடிய போது, திடீரென வந்த மின்சார ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய அஜாக்ரதை கூட நமது உயிருக்கு ஆபத்தை உருவாக்கிவிடும். குறிப்பாக படியில் தொங்கி கொண்டு பயணிப்பது, மின்சார ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்குவது, ரயில் புறப்பட்ட பின் வேகமாக ஓடிச் சென்று ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனை கண்காணிக்க காவல்துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் இயர் பட்ஸை தவறவிட்டு தேடிய போது உயிரிழந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் புதிய சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராஜகோபால்.
19 வயதாகும் இவர், சைதாப்பேட்டையில் உள்ள அரசு விடுதியில் தங்கி நந்தனத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்திருக்கிறார். இவர் பார்ட் டைம் பணியாக கேட்டரிங் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் இன்று கேட்டரிங் வேலை செய்வதற்காக சைதாப்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் ஏறி இருக்கிறார்.
இந்த ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது, ராஜகோபாலின் இயர் பட்ஸ் தவறி கீழே விழுந்துள்ளது. இதன்பின் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் தனது இயர் பட்ஸை ராஜகோபால் தேடி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மற்றொரு மின்சார ரயில் ஒன்று வந்திருக்கிறது. அதனை ராஜகோபால கவனிக்க தவறி இயர் பட்ஸ் தேடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து மின்சார ரயிலில் மோதி ராஜகோபால் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ராஜகோபாலை, சக பயணிகள் இணைந்து ஆம்புலன்ஸில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் ராஜகோபாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர். இந்த சம்பவம் சென்னை மின்சார ரயில் பயணாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications