உதயநிதி வைத்த கோரிக்கை.. சட்டமன்றத்தில் வெடிக்க காத்திருக்கும் பிரச்சனை! விஜய்க்கு பெரிய சிக்கல்!
சென்னை: சட்டமன்றத்தில் முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் திருத்தத்துடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், உதயநிதி கொடுத்த திருத்தத்திற்கு தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன.
உதயநிதியின் திருத்தம் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும், திருத்தத்தை சேர்க்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றன. அப்படி என்ன திருத்தத்தை முன்மொழிந்தார் உதயநிதி? விரிவாக பார்ப்போம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு காவிரி நடுவர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை ஏற்காத கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வந்தது. இறுதி தீர்ப்பு எனில், இதை எதிர்த்து யாரும் அப்பீல் செய்ய முடியாது. தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
தீர்ப்பில், காவிரி மூலமாக பாசனம் பெறும் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், அதாவது தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், கடந்த மார்ச் மாதம் 4ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
வெடித்த பூகம்பம்
இந்த கடிதம் எழுதப்படுவதற்கு முன்னர், காவிரி விஷயம் குறித்த விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தார். அந்த கூட்டத்தில் இப்படி ஒரு கடிதம் எழுதப்போகிறோம் என்று சொல்லவில்லை. ஆனால், பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இதுதான் இப்பொது பூகம்பமாக வெடித்திருக்கிறது.
இந்த கடிதம், நேற்று முன்தினம்.. அதாவது சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில், உதயநிதி ஸ்டாலின் திருத்தம் கோரிய நிலையில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. அதுவரை யாருக்கும் தெரியவில்லை. பிரச்சனை இத்தோடு முடியவில்லை.
உண்மையான பிரச்சனை
இந்த கடிதத்தின்படி, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க உதயநிதி கேட்டிருந்தார். திருத்தம் என்ன என்று அவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல், முதலமைச்சரும் தீர்மானத்தில் அதை சேர்க்க.. அவை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இங்குதான் உண்மையான பிரச்சனையே தொடங்கியிருக்கிறது. புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், ஏற்கெனவே தமிழகத்திற்கு இருக்கும் வலுவான சட்ட உரிமைகள் பலவீனமாகும். இதனால் இந்த விஷயத்தில் தீர்வு காண இன்னும் கால தாமதம் ஏற்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பையும் இது நீர்த்துப்போக செய்யும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுதான் பிரச்சனை.
புதிய சிக்கல்
இதில் இவ்வளவு பஞ்சாயத்துகள் இருப்பதை தெரியாமல் விஜய் எப்படி, உதயநிதியின் திருத்தத்தை ஏற்கலாம்? என்று தவெக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதேபோல, பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது.
விஜய் தலைமையிலான அரசு அமைந்து, இன்னும் ஒரு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் விஜய்க்கு எதிராக திரும்பியிருப்பது, தவெகவுக்கு புதிய சிக்கலாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications