நீதிபதி, நீதிமன்றத்தை கே.எஸ் அழகிரி அவமதித்து விட்டார்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்!
சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக்தில் கடந்த 1 ம்தேதி மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனின் 93-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க..ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொணடனர்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இதற்காக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது காரில் வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். நீதிபதி என்று கூறியும் அவருக்கு வழி ஏற்படுத்தி கொடுக்காமல் போலீசார் அவரை காக்க வைத்ததாக கூறப்படுகிறது.

உள்துறை செயலாளர் ஆஜர்
இதனால் அவர் நீதிமன்றத்திற்கு வர சுமார் 25 நிமிடம் காலதாமதமானது. பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகினார்.

கே.எஸ் அழகிரி கண்டனம்
நீதிபதி கூறியதை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, 'அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துகொள்ளாமல் நீதிபதி பொங்கி எழுந்துள்ளார் எனவும் இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறி பேசியது வேதனை அளிப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

கே.எஸ் அழகிரி மீது புகார்
இந்த நிலையில் கே.எஸ் அழகிரியின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

விரைவில் விசாரணை
இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிடப்பட்டது. இதை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications