முத்துராமலிங்க தேவர் சர்ச்சை- நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ1,001 பரிசு- அர்ஜூன் சம்பத்
சென்னை: தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியை உதைத்தால் ஒரு உதைக்கு ரூ1,001 பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இத்தகைய வன்முறை தூண்டும் பதிவுகளை வெளியிட்ட அர்ஜுன் சம்பத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் அண்மையில் விஜய் சேதுபதியின் உதவியாளரை பயணி ஒருவர் பாய்ந்து வந்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பும் சமாதானம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

விஜய் சேதுபதி மீது தாக்குதல்
ஆனால் விஜய் சேதுபதியின் உதவியாளரை உதைத்ததாக சொல்லப்படும் நபர், விஜய் சேதுபதி இந்தியாவை விமர்சித்தார்; முத்துராமலிங்க தேவரை விமர்சித்தார். அதனால் உதைத்தேன் என யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது இந்த பேட்டி வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் - அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/- என பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

அர்ஜூன் சம்பத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ள அர்ஜூன் சம்பத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது ரொம்ப தவறான பதிவு. அர்ஜுன் சம்பத் இப்படி ஓர் அறிவிப்பு செய்து இருந்தால் மிகவும் தவறானது.தயவு செய்து இந்த பதிவை எடுத்து விடுங்கள் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் சர்ச்சை
நடிகர் விஜய்சேதுபதி ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது பெரும் சர்ச்சையானது. விஜய் சேதுபதிக்கு உலகத் தமிழர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து முத்தையா முரளிதரன் படத்தில் தாம் நடிக்கவில்லை என அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் விஜய் சேதுபதி. தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தியதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி.












Click it and Unblock the Notifications