அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே! நாசர் விஷயத்தில் கனத்த இதயத்துடன் முதல்வர் எடுத்த முடிவு!
சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து நாசர் நீக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கணத்த இதயத்துடன் முடிவெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாசர் கொஞ்சம் முன்கோபக்காரர் என்றாலும் கூட கட்சிப்பணி என்று வந்துவிட்டால் குடும்பம், சாப்பாடு, தூக்கம் என எதைப்பற்றியும் சிந்திக்காமல் முழு மூச்சாக சுற்றி சுழலக் கூடியவர்.

அதுமட்டுமில்லை முதலமைச்சர் ஸ்டாலினுடன் இளைஞர் அணி ஆரம்பிக்கட்ட காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். பள்ளிப்பருவம் முதல் கட்சியை மட்டுமே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து வருபவர்.
அமைச்சர் நாசரை பற்றி அவரது இல்ல மண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது உள்ளது உள்ளபடி உங்கள் மீள் பார்வைக்காக,
''இன்றைக்கு நாசர் அமைச்சராக இருக்கிறார் என்றால். ஏதோ சாதாரணமாக இந்தப் பொறுப்பு அவருக்கு கிடைத்துவிடவில்லை. நான் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.''
''வாரத்திற்கு எப்படியும் நான்கு, ஐந்து நாட்கள் தமிழ்நாட்டில் என்னுடைய சுற்றுப்பயணம் இருந்து கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளுக்குத் தான் அதிகமாக என்னுடைய பயணத்தை நான் நடத்துவேன்.''
''தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, எனக்குத் துணைக்கு ஒரு மூன்று பேர் வருவார்கள், நாசர் வருவார், அடுத்தது பல்லாவரம் சிங்காரம் வருவார், அதேபோல் நாகையைச் சார்ந்த அசோகன் ஆகிய மூன்று பேர்தான் இணைபிரியாமல் எப்போதும் என்னுடைய சுற்றுப்பயணத்தில் வருவார்கள். ''
''ஆனால் துணைக்கு வருவார்களே தவிர, அதிகமாக அந்த வேனில் தூங்கிக்கொண்டு வந்தது யார் என்று கேட்டீர்களானால், நாசர்தான். இதை எதற்காக நான் சொல்கிறேனென்றால், அடிக்கடி தூங்கிக்கொண்டு வரும்போது அவரை எழுப்புவதுண்டு. எனக்கு துணைக்கு வந்தாயா? அல்லது உனக்கு நான் துணைக்கு வந்திருக்கிறேனா என்று கேட்டு நான் எழுப்புவதுண்டு.''
'' அதனால் என்ன செய்வார் என்றால், எப்போதும் தூக்கம் வருவதற்குத்தான் மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். உடல்நலம் சரியில்லாதவர்கள், தூக்கம் வராதவர்கள் தூக்க மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாசர் என்ன செய்வார் என்றால், தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை போட்டுவிட்டு வருவார், அப்படியிருந்தும் தூங்குவார். அப்படிப்பட்ட நிலையில் அவருடன் பயணம் செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.''
''நம்முடைய நாசர் அவர்கள் இன்றைக்குப் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், பாராட்டக்கூடிய அளவிற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்''.
மேற்கண்ட வரிகள் அனைத்து நாசர் குறித்து முதல்வர் உதிர்த்த வார்த்தைகள். அந்தளவு முதல்வர் குட்புக்கில் நாசர் இடம்பெற்றிருந்தார். இடையே நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்கள் தான் முதல்வரின் பொறுமையை சோதித்து பார்த்திருக்கின்றன.
இருப்பினும் நாசரை நீக்க வேண்டுமா என ஒன்றுக்கு பலமுறை முதல்வர் யோசித்ததாகவும், வேறுவழியில்லை என்பதால் அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவை அவர் கணத்த இதயத்துடன் எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications