2026 இல் 5 முனைப் போட்டி? விஜய்யின் மைனஸ் பாயிண்ட்ஸ் : திருமா டிகோட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 2026 தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் அதனால் 5 முனை போட்டிகள் ஏற்படும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் விஜய் திராவிட மாடல் அரசை எதிர்த்துப் பேசிய பிறகு, அவரை இரண்டு தலைவர்கள்தான் அதிகமாக விமர்சித்து கருத்துகளை முன்வைத்து வருவதைப் பார்க்க முடிகிறது. விஜய் திராவிடமும் தமிழ்த் தேசியமும் இருகண்கள் என்று அறிவித்ததை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொள்கை ரீதியாக முரண்படுவதால் அவருடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்து வருகிறார்.

vijay thirumavalavan

அடுத்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பல சந்தேகங்களை முன்வைத்துப் பேசி வருகிறார். ஊழல் ஒழிப்பு, திராவிட மாடல் எதிர்ப்பு, பாஜகவையும் திமுகவையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது போன்ற விஜய்யின் பார்வையிலிருந்து மாறுபடுவதாக விளக்கம் அளித்து வருகிறார்.

ஆனால், அரசியல் களத்தில் விசிகவை தன்பக்கம் இழுக்கவே விஜய் அதிகாரத்தில் பகிர்வு என்று ஒரு உத்தியை கையில் எடுத்துள்ளார். அது விசிகவுக்கான வலை என்று சிலர் பேசி வருகின்றனர். அது குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், வாரிசு அரசியல் என்பது திமுகவில் மட்டும் இல்லை. அது நாடு முழுவதும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "பாஜகவை நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் மட்டும் எதிர்த்தால்போதும் என நினைப்பது ஒரு தேர்தல் அரசியல். அதில் தேசிய அளவிலான பார்வை ஒரு பார்வை இல்லை. பாஜக தமிழ்நாட்டில் கணிசமாக வளர்ந்து வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சில கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை ஆதரிக்கும் கட்சிகள் இங்கே உள்ளன. பாஜக முன்வைக்கும் வெறுப்பு அரசியலின் தாக்கம் தமிழ்நாட்டில்தான் பெரிய அளவில் இல்லை. பிறமாநிலங்களில் தாக்கம் அதிகம் உள்ளது.

இந்தச் சூழலில் அதிமுகவை எதிராக முன்வைத்து அரசியல் செய்வதற்காக தேவையே தமிழ்நாட்டில் இல்லை. திமுக கூட்டணியை வலிமையாக எதிர்த்து அதிமுக அரசியல் செய்யவே இல்லை. அதற்காக வாய்ப்பே இல்லாத சூழல்தான் நிலவுகிறது. வரும் காலத்தில் 5 முனை போட்டிதான் வரப்போகிறது. சீமான் யாருடனும் கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டார். பாஜக தலைமையில் ஒரு கூட்டணி வரும். அதிமுக தனியாகப் போட்டியிடும். முன்பே திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. புதியதாக விஜய் ஒரு அணியைத் தொடங்கி உள்ளார். ஆக, 5 முனைப் போட்டிகள் உறுதியாகிறது.

vijay thirumavalavan

விஜய் அதிமுக கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளர் என்ற முகம் விஜய்க்குக் கிடைக்காது. எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் கூட்டுச் சேர்ந்து துணை முதல்வராக ஒப்புக் கொள்வாரா? ஒருவேளை துணை முதல்வர் ஏற்று விஜய் போனால், அவர் பேசிய ஊழல் ஒழிப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு எல்லாம் அடிப்பட்டுவிடும். குடும்ப அரசியல் என்பது திமுக உட்கட்சி விவகாரம். மக்கள் ஏற்றுக் கொண்டு திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வரவில்லை.

அந்தக் கட்சியில் உள்ள பெரும்பான்மை தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் ஸ்டாலின் கட்சியின் தலைவரானார். உதயநிதியைத் துணை முதல்வராக அக்கட்சியில் உள்ள மூத்த அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வாரிசு அரசியல் என்பது இந்தியா முழுக்க உள்ளது. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. எனவே யாரும் பதவிக்கு வரவில்லை.

அண்ணாதுரைக்குப் பின்னர் கருணாநிதி திமுக தலைமைக்கு வந்தபோதும் விமர்சனங்கள் இருந்தன. அதை மீறி அவர் கட்சியைக் காப்பாற்றினார். வைகோ பிரிந்த போது 17 மாவட்டச் செயலாளர்கள் வெளியேறினார்கள். அப்போதும் கட்சியைக் காப்பாற்றியவர் கருணாநிதி. ராஜீவ்காந்தி இறந்த போது திமுக 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இனி திமுகவுக்கு எதிர்காலமே இல்லை என்றார்கள். மீண்டும் திமுக ஆளும் கட்சியாக வந்தது. இன்றைக்கு திமுக வலிமையாக இருக்கிறது. கட்டமைப்பு ரீதியாக வலுவாக உள்ளனர். அதை மீறி விஜய் புதியதாக ஒன்றை சொல்லவேண்டும். இவர் திமுகவின் சாயலில் இருக்கிறார். புதிய முழக்கம் இல்லை. எல்லாம் பழையதாக உள்ளன.

பெரியாரை திமுக முன்வைக்கிறது. அம்பேத்கரை நிறைய இயக்கங்கள் வைத்துள்ளன. காமராஜரைக் காங்கிரஸ் வைத்துள்ளது. அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியாரை எப்படி கொள்கை தலைவர்களாக அடையாளப்படுத்த முடியும்? அது எனக்குப் புரியவில்லை. காந்தி ஒரு கொள்கைக்கான தலைவர். அடுத்து அதைச் செழுமை செய்தவர் நேரு.

காமராஜரை ஒரு கருத்தியல் தலைவர் எனச் சொல்ல முடியாது. பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் கொள்கை தலைவராக முன்வைத்தது பொருத்தமாக உள்ளது. மற்றவர்கள் யாரும் பொருந்திப் போகவில்லை. அதில் ஒரு நெருடல் இருக்கிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+