“இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்”.. தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் பற்றி ஸ்டாலின் ட்வீட்!
சென்னை: "இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்" என தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களை வரவேற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள்தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதாவது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிப்பைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் சென்னை வருகை தந்துள்ளனர். கர்நாடகா, பஞ்சாப் மாநில ஆளும் கட்சி சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் சரியான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும்.
முறையான தொகுதி மறுசீரமைப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்களையும் அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு நான் அன்புடன் வரவேற்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications