சல்லுன்னு போலாம்.. சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம்.. ரூ.164 கோடியில் தி நகரில் திறப்பு.. ஹேப்பி
சென்னை: சென்னையில் அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலை வரை கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இரும்பு மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது.. 55 தூண்களுடன், 3800 மெட்ரிக் டன் இரும்பு கொண்டு, 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.. இந்த பாலத்திற்கு மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றை கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடி நகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தி.நகர்
சென்னையின் மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பதே டிராபிக்தான்.. அதிலும் சென்னை தி.நகர் என்றாலே போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமிருக்காது.. சென்னையின் மையப்பகுதியான தி.நகர், வர்த்தக பகுதியாகவும் உள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்..
ஜவுளி கடைகளும், தங்கநகை வணிகமும் நடைபெறும் முக்கிய இடமாக தி.நகர் விளங்கி கொண்டிருக்கிறது. எனவே, மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.. எனவேதான், இந்த நெரிசலை குறைக்க, ரூ.164 கோடியில் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது இது முதல் இரும்பு மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
முதல் இரும்பு பாலம்
அண்ணா சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைத்து புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023ல் துவங்கி வைத்திருந்தார்.. இதையடுத்து, 55 தூண்களுடன், 3800 மெட்ரிக் டன் இரும்பு கொண்டு, 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக மேம்பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்தது.. ஆனால், இந்த மேம்பாலம் கட்ட நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது..
இந்த மேம்பாலம் பாலம் சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள்
சமீபத்தில் பாலங்கள் தலைமை பொறியாளர் பி.சங்கரவேலு இந்த மேம்பாலம் குறித்து கூறும்போது, "இந்த புதிய பாலம் 1.2 கி.மீ நீளம் உள்ளது. ஏற்கனவே உள்ள பழைய பாலம் 0.8 கி.மீ நீளம் உள்ளது. இந்த 2 பாலங்களையும் சேர்த்து 2 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடந்து விடலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.. அதாவது புர்கிட் சாலையில் இருந்து பழைய மேம்பாலம் வரை வேலை செய்ய போலீஸ் அனுமதிக்காக காத்திருக்க நேரிட்டது.. இதற்கு பிறகே காவல்துறையின் அனுமதி கிடைத்து பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இரும்புப் பாலம் உள்ள நிலையில், இரண்டாவது முழு இரும்புப் பாலம் இப்போது தி.நகரில் அமைந்துள்ளது. பெரும்பாலான பாலங்கள் கான்கிரீட்டில் கட்டப்படும்போது, முதல் முறையாக இந்த மேம்பாலம் இரும்புத் தூண்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளதால், உறுதி தன்மையுடன் திகழும்..
இன்று மேம்பாலம் திறப்பு
இந்த பிரமாண்ட பாலத்தின் சிறப்புகளை கழுகு பார்வையில் டிவிட்டரில் நேற்றைய தினம் பதிவிட்டிருந்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐஏஎஸ். இந்த வீடியோவானது, சென்னைவாசிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.
இந்த பாலம் திறக்கப்பட்டுவிட்டால் டிராபிக் இனி எளிதாக இருக்கும்.. தி.நகர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.
காரணம், தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 பகுதிகளையும் இந்த பாலம் இணைக்கிறது.
சென்னை வாகன ஓட்டிகளுக்கு குஷி
போக்குவரத்து தொந்தரவு இல்லாமல் , மக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சீக்கிரமாக சென்று வரலாம். குறிப்பாக, சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் பகுதி மக்களுக்கு இந்த மேம்பாலம் உபயோகமாக இருக்கும். இதுவரை 45 நிமிடங்களுக்கு பயணம் இருந்த நிலையில், இந்த புதிய மேம்பாலத்தினால் 5 நிமிஷத்திலேயே சென்று விடலாம். அந்தவகையில் சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த பாலம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போது அனைத்து கட்டுமானப்பணிகளும் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று இந்த மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த மேம்பாலத்தை நேரில் வந்து இன்று திறந்து வைத்துள்ளார்.. இந்த பாலத்திற்கு மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications