ஸ்டாலின் இல்லை.. உதயநிதி தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனை.. அதிகாரிகளுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது தமிழக அரசு. சென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் ஏற்கனவே ஒரு முறை நடந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த 2வது ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அனைத்து அதிகாரிகளும் மழைக்கால பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும், பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளில் தொய்வு இருக்கக் கூடாது என்றும், நிதிப் பற்றாக்குறை காரணமாக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதிகளை மழைநீர் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக சேவைத்துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன்,நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர் தாரேஷ் அகமது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் எஸ்.பிரபாகர், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல்/ இணை/ துணை ஆணையாளர்கள், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர், நிலைக்குழுத் தலைவர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் சேவைத்துறை அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications