சென்னை கோயம்பேட்டில் ஷாக்.. அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி! போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 21 வயது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வந்த லட்சுமி நாராயணன் (21) எனும் மாணவனும், அவரது நண்பர் ரோஹித் (22) என்பவரும் கோயம்பேடு அருகே பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது வேகமாக மோதிவிட்டு கடந்து சென்றிருக்கிறது. இந்த கோர விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

அதேபோல அவரது நண்பர் ரோஹித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லட்சுமி நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல ரோஹித்தை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களை சோதனை செய்து வருகின்றனர்.

சென்னையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளில் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த விபத்திற்கு இளைஞர்கள் காரணமா? அல்லது விதிகளை மீறி இயங்கிய அடையாளம் தெரியாத வாகனம் காரணமா? என இரு கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications