சமூக நீதிப் போராளி... சகல"கலாய்" மன்னன்.. சவுண்டு பார்ட்டி.. ஹேப்பி பர்த்டேங்ண்ணா!
சென்னை: ஆமா.. அது என்னன்னு பாரு.. திரும்ப வைத்து டுமீல்னு பட்டக்ஸில் உதைக்கும் கவுண்டமணியை எப்படி ரசித்தார்களோ.. "கொஞ்ச நாளைக்கு நீயும் உன் பிள்ளையும் வெட்டியான் வேலை பாருங்க" என்று பேசிய கவுண்டமணியையும் மக்கள் ஜாதி பாகுபாடின்றி ரசித்தார்கள்.. அதுதான் கவுண்டமணி!
நம்ம வீட்டில் ஒரு பெரியவர் இருந்து, இடித்துரைத்துப் பேசினால் எப்படி ரசிப்போமோ, கேட்போமோ அப்படித்தான் கவுண்டரும்.. அவருக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, மொழி கிடையாது.. ஏன் மனுஷனே கிடையாது.. எது கிடைத்தாலும் விட மாட்டார்.
இது போன்றதொரு காமெடியன்கள் மட்டும் வராமல் போயிருந்தால்.. தமிழ்ச் சமுதாயத்தை திருத்தும் முயற்சிகளில் தமிழ் சினிமா ரொம்பவே பின் தங்கிப் போயிருக்கும். கவுண்டமணி விட்டுச் சென்ற இடத்தைப் பிடிக்க பலரும் முயற்சித்தாலும் கூட "டேய்.. 2 ஸ்டெப்ஸ் பேக்" என்றுதான் அந்த "சீட்" அத்தனை பேருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு ஹாட் சீட் அது.!

கழுவி ஊத்துவார்
கவுண்டமணிக்குள் இருந்தவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல. நல்லா கலாய்ப்பார்.. ரசிச்சுட்டே இருப்போம்.. திடீரென சில சிந்தனை பிட்டுகளை எடுத்து அதில் நுழைத்து வீசுவார்.. சிரிப்பதை விட்டு விட்டு சிந்திப்போம்.. மறுபடியும் "டகால்டி" செய்து அதை காமெடி டிராக்கில் கொண்டு போய் விட்டு விடுவார்.. இது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல.

பொறாமைம்மா!
"அது ஒன்னுமில்ல ராஜா.. கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு ஊருக்குள்ள ஒரு பொறாமை.. " .. காலம் காலமாக ஊறிப் போய்க் கிடக்கும் "மன அழுக்கை" எத்தனை அழகாக இந்த டயலாக்கில் கவுண்டமணி வெளிப்படுத்தி ஒரு குத்து விட்டிருக்கார் பாருங்க.

அங்கேயே நிக்கிறாங்களே
"அட அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யறாங்க.. தனக்குத்தானே வால் போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க.. ஒன்னும் இல்லாட்டி பிறந்த நாள் கொண்டாடுறாங்க.. அதிலயும் 33 வயசுக்கு மேல போறாங்கனா போக மாட்டேங்கிறாங்க.. அங்கேயே நிக்கிறாங்க.. இவங்க மட்டும்தான் பொறந்தாங்களா.. நாமெல்லாம் தேவையில்லாம பொறந்துட்டோமா".. இது கவுண்டர் அடிச்ச "செல்ஃப் கோல்". இதுக்கெல்லாம் ஒரு தில்லு தெனாவெட்டு வேணும்.. அவருக்கு மட்டுமே அது உண்டு.

ஹேய் ரிமூவ் தி கேப்!
"ஹேய் ரிமூவ் தி கேப்.. ரிமூவ் தி கூலிங் கிளாஸ்.. வாடி பார்த்தசாரதி".. இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்.. அதுவும் கவுண்டர் கிட்டதான் இருந்தது.. படம் முழுக்க இவர் செய்த ரவுசுதான்.. கமல்ஹாசனையும் தாண்டி ஒரு தனி ஆவர்த்தனம் செய்ய வைத்தது. கிட்டத்தட்ட இவர் ஒரு யானை மாதிரி.. புகுந்துட்டார்னா போச்சு.. கலகலக்க வைத்து விடுவார்!

அடியாத மாடு படியுமா
ஒருமுறை செய்தியாளர் ஒருவர், அது என்னங்க அடிச்சு அடிச்சு காமெடி பண்றீங்க.. மனிதாபிமானமே இல்லையா.. மனிதத்தனம் வேண்டாமா.. பாவம் இல்லையா செந்தில்.. அவரும் ஒரு மனிதர்தானே.. என்று கேட்டபோது, கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் கொடுத்த இன்ஸ்டன்ட் பதில் என்ன தெரியுமா.. "அடியாத மாடு படியாது" என்று.. கேள்வி கேட்டவர் முதல் அத்தனை பேருமே விழுந்து விழுந்து சிரித்து விட்டனர்.

நம்ம நாடும்
கவுண்டமணியின் பார்முலா ரொம்ப சிம்பிள்.. உங்கள் வீட்டில், பக்கத்து வீட்டில், அந்தத் தெருவில், இந்த கிராமத்தில், நம்ம மாநிலத்தில், அந்த நாட்டில் என்ன நடக்குதோ.. அதுதான் இவரது சப்ஜெக்ட்.. அதைத்தான் அவர் நகைச்சுவையாக்கிக் கொடுத்தார். அவர் நடிக்கவில்லை.. சாமானிய வாழ்க்கையை, சமூகத்தை, அரசியலை அப்படி அப்படியே காட்சிப்படுத்தினார்.. அதை மக்களும் ஏற்றுக் கொண்டனர். காரணம், அது அவர்களது வாழ்க்கை.. அதை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்தவர் கவுண்டமணி.

கிடைத்த இயக்குநர்கள் அப்படி
கவுண்டமணிக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்தார்கள்.. அவர்கள் தாங்கள் நினைத்ததை, கவுண்டமணி மூலம் சாதித்தனர். எந்த இயக்குநராக இருந்தாலும் கவுண்டமணி அவர்களுக்கு ஈடு கொடுத்தார். பாரதிராஜாவாகட்டும்.. ஷங்கராகட்டும்.. வி.சேகர் ஆகட்டும்.. அத்தனை பேரின் பாத்திரத்திலும் வடிவின்றி கலந்த தண்ணீராக நின்று வென்றவர் கவுண்டமணி.

தீ வசனங்கள்
வி.சேகரின் படங்களில் கவுண்டமணிதான் ஹீரோவாக ஜொலித்தார். பேசிய அத்தனை வசனங்களையும் பாடமாகவே வைக்கலாம்.. அதிலும் ஒன்னா இருக்கக் கத்துக்கணும் படத்தில் கவுண்டமணியை வைத்து இந்த ஜாதி அவலங்களை வெளுத்தெடுத்திருப்பார் வி.சேகர். ஒவ்வொரு வசனமும் தீ...! கவுண்டமணி ஒரு தேர்ந்தெடுக்கப்படாத "முதல்வர்".. தேர்தலில் நிற்காமல் மக்களின் மனங்களை வென்ற "எம்பி, எம்எல்ஏ".. காரணம் அவர்கள் செய்ய வேண்டிய சமூக நீதியையெல்லாம் தனது படங்களின் மூலம் செய்த "கவுண்டர் மகான்".. காலங்கள் எத்தனை ஆனாலும் கவுண்டமணி .. கவுண்டமணிதான்!
ஹேப்பி பொறந்த நாள் வாழ்த்துக்கள் மணியண்ணே!












Click it and Unblock the Notifications