Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலிண்டர் இருப்பு தொடர்பாக கடந்த இரண்டு நாள் முன்பு பேசிய அமைச்சர் சுரேஷ் கோபி 53 லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க முடியும் என்றும் 9.5 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று கூறியிருந்தார். இதனிடையே மேற்கு ஆசியாவில் 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர், இந்தியாவுக்கு ஒரு கடுமையான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்த போரினால் ஏற்பட்ட கடினமான உலகளாவிய நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என தெரிகிறது. எனவே கொரோனா பெருந்தொற்றின் போது தேசம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கிய தாக்குதலால், மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், உலகின் 20 சதவிகித கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும், ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. அதன் விளைவாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கேஸ், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றாக பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்கள் பல மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தான், நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பான கேள்விக்கு, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி அண்மையில் பதில் அளித்தார்.

A Major Announcement for India Did You Notice What Suresh Gopi Said Regarding Narendra Modi

கச்சா எண்ணெய் இருப்பு

அப்போது அவர் கூறும் போது, "நாட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய்யை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக சேமித்து வைக்க நிலத்தடி உட்கட்டமைப்பு வசதி உள்ளது. அங்கு 53 லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க முடியும். அதை கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டாலோ அல்லது விலைவாசி உச்சம் தொட்டாலோ 9.5 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது அங்கு மூன்றில் இரண்டு மடங்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. கச்சா எண்ணெய் இருப்பைக் கையாளும் ஐஎஸ்பிஆர்எல் நிறுவனத்திடம் தற்போது 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இது மொத்த கையிருப்பு திறனின் 64 சதவிகிதம் ஆகும்.

74 நாட்கள் சேமிக்க முடியும்

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான தற்போதைய மொத்த தேசியத் திறன் 74 நாட்கள் ஆகும். இதில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளின் திறனும் அடங்கும். உண்மையான கையிருப்பு என்பது, கையிருப்பு மற்றும் உண்மையான நுகர்வு ஆகிய இரண்டையும் பொறுத்து மாறும். எனவே இந்த இரண்டையும் நிலையானதாக வரையறுக்க முடியாது.

41 நாடுகளில் இறக்குமதி

இந்தியா தற்போது பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 41 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் வழக்கமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் நாடுகளும், புதிய விநியோகஸ்தர்களான அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா, கனடா, கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகியவையும் அடங்கும். உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக உள்ள இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 88 சதவிகிதத்திற்கு இறக்குமதியையே பெரிதும் சார்ந்துள்ளது. அதில் 50 சதவிகிதம் வழக்கமாக ஹார்மஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது" என்றார்.

பிரதமர் மோடி விளக்கம்

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மக்களவையில் கூறுகையில், "மேற்கு ஆசிய மோதலில் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளைத் தடுப்பதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ராஜதந்திரம்

இந்த போர்ச் சூழலுக்கு மத்தியிலும், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ராஜதந்திரத்தின் மூலம் இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும்தான் ஒரே வழி. சில சக்திகள் இதுபோன்ற சூழ்நிலைகளை உள்நாட்டில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, அனைத்துச் சட்டம்-ஒழுங்கு அமைப்புகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா போல் நீண்ட காலம்

இந்த போரினால் ஏற்பட்ட கடினமான உலகளாவிய நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என தெரிகிறது. எனவே கொரோனா பெருந்தொற்றின் போது தேசம் ஒன்றுபட்டு நின்றதைப் போல தற்போதும் ஒற்றுமையாகவும், எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டும். பொறுமை, நிதானம் மற்றும் விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.


கடுமையான நெருக்கடி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநிலங்களவையில் பேசுகையில், "மேற்கு ஆசியாவில் 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர், இந்தியாவுக்கு ஒரு கடுமையான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் இந்தியாவின் வர்த்தகப் பாதைகளைச் சீர்குலைக்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வழக்கமான விநியோகத்தைப் பாதிக்கிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பல இந்திய மாலுமிகள் கப்பல்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஒருமித்த குரல்

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒருமித்த குரல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டியது அவசியம். மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், வளைகுடா நாடுகளின் தலைவர்கள், போரில் ஈடுபட்டுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனும் இந்தியா தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதே இதன் நோக்கம். அவர்களிடம், பதற்றத்தைத் தணிப்பது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சவாலாகிவிட்டது

நெருக்கடி காலங்களில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை. அனைத்து நாடுகளும் தங்கள் மண்ணில் உள்ள இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் இயங்குவது மிகவும் சவாலாகிவிட்டது. இருந்தபோதிலும், எண்ணெய் மற்றும் கியாஸ் விநியோகம் எங்கிருந்தாலும் இந்தியாவை வந்தடைவதை உறுதி செய்வதை ஒரே நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் செயல்படுகிறது. கடந்த சில நாட்களாக, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. கப்பல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. இந்த முயற்சிகள் தொடரும்.

சோதனை காலம்

வரவிருக்கும் காலம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க சோதனை காலமாக அமையும். இதில் வெற்றி பெற மாநிலங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இந்த நெருக்கடிகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை விகிதாச்சாரம் இன்றி பாதிப்பதால், பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் பலன்கள் பயனாளிகளை உரிய நேரத்தில் தொடர்ந்து சென்றடைவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பதுக்கல்காரர்கள்

இதுபோன்ற காலங்களில் கள்ளச்சந்தைக்காரர்களும், பதுக்கல்காரர்களும் மிக வேகமாக செயல்பட முனைவார்கள். இதுபோன்ற புகார்கள் எழும் இடங்களில் மாநிலங்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். இதை உறுதி செய்வதற்காக அனைத்து மாநில அரசுகளும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நீண்ட காலத்திற்கு நீடிக்கும்

நிலைமை ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இந்த போரின் பாதகமான விளைவுகள் நீண்ட காலத்துக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், அரசாங்கம் விழிப்புடன் உள்ளது, தயாராக இருக்கிறது. தகுந்த வியூகத்தை வகுத்து, ஒவ்வொரு முடிவையும் மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருகிறது. இந்த நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முதன்மையானது. இதுவே நமது அடையாளம், இதுவே நமது பலம்" இவ்வாறு கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+