செந்தில் பாலாஜி பிணை உடனே ரத்தாகும்.. உச்ச நீதிமன்றம் போட்ட பெரிய கண்டிஷன்.. தீர்ப்பு விவரம்
சென்னை: செந்தில் பாலாஜி தேவையில்லாமல் ஒத்திவைப்பு கோரினாலோ? அல்லது அற்பமான காரணங்களை கூறி வழக்கு விசாரணைகளுக்கு தடைகளை உருவாக்கினாலோ அவரது பிணை ரத்து செய்யப்படலாம் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு நிபந்தனை விதித்த உச்ச நீதிமன்றம், விசாரணை தொடர்பான விவகாரத்தில் அவரை எச்சரித்துள்ளது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கை பொறுத்த வரை உச்ச நீதிமன்றம் முக்கியமான கேள்வியை எழுப்பியது. இதுதான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமாக அமைந்தது. அதாவது, போக்குவரத்துத் துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மூன்று வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப் போகிறதா மற்றும் 1,000-க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கைத் தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை விசாரிக்கப் போகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் மொத்தம் 47 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக இருக்கிறார்கள். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பார்க்கும் போது, காவல்துறை, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துதுறை என்று பல பிரிவுகளிலும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டிருக்கிறது. எனவே முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து தனித்தனியாக விசாரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். மேலும் செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்கிறார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன" என்றார்.
இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், ஏனென்றால் அதுபோன்று வழக்கை தனித்தனியாக விசாரிக்க முடியாது என்றும் அதற்கான முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனிடையே செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், "ஒரே வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது" என்று கூறியிருந்தார். இந்த வாதங்களே உச்ச நீதிமன்றம் ஜாமீன் தர காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இன்று அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் தந்து உத்தரவிட்டனர்.
வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக கூறப்படுகிறது. ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் கிடையாது. அதேநேரம் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் செந்தில் பாலாஜி மேற்கொள்ளக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வெளியாகி உள்ளது. அதில் செந்தில் பாலாஜி தேவையில்லாமல் ஒத்திவைப்பு கோரினாலோ? அல்லது அற்பமான காரணங்களை கூறி வழக்கு விசாரணைகளுக்கு தடைகளை உருவாக்கினாலோ அவரது பிணை ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications