பரனூர் டோல்கேட் டூ மறைமலை நகர்... சென்னை ஜிஎஸ்டி சாலையில் 13 கிமீ திரில் சேஷிங்.. போலீஸ் செம்ம
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக இன்று காலை நிறுத்தப்பட்ட லாரியை, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு நபர் திருடி சென்றார். இதை பார்த்து லாரியை ஓட்டி வந்தவர் கூச்சலிட்ட நிலையில், அந்த பகுதியில் இருந்த போலீசார் உஷார் அடைந்து லாரியை துரத்தி பிடிக்க முயன்றனர். காவலர் ஒருவர் லாரியில் தொங்கியபடி சென்ற நிலையில், நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார் திருடன். பின்னால் போலீசார் விரட்டி வந்த நிலையில், சுமார் 10 கிமீ தள்ளி மறைமலை நகரில் சிக்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக டிப்பர் லாரி ஒன்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரி கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருக்கு சொந்தமானது ஆகும். இந்த லாரியை கண் இமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார்.

இதை கவனித்து உரிமையாளர் தகவல் கொடுத்த நிலையில், சுங்கச்சாவடியில் இருந்த போலீசார், லாரியை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் லாரியை நிறுத்தவே இல்லை.. சாலையில் தடுப்புகளை அமைத்து, லாரியை தடுக்க முயன்ற போது, அதனையும் மோதியதுடன், அந்த ஆசாமி லாரியை வேகமாக இயக்கி உள்ளார்.
இதனிடையே மடக்கி பிடிக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர். ஆனால் லாரியை நிறுத்துமாறு எவ்வளவோ சொல்லியும் கேட்கவே இல்லை. இதையடுத்து சிங்க பெருமாள் கோவில் அருகே சிக்னலில் மீண்டும் தடுப்புகளை அமைத்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர், லாரியின் முன்பக்கத்தில் ஏறிய நிலையில், அப்போதும் அந்த லாரியை திருடிய மர்ம நபர் இன்னும் வேகமாக இயக்கினார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் உயிரை கையில் பிடித்தபடி, தொங்கிக்கொண்டே சென்றார்.
இதனிடையே போலீசாருடன், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள், பெரிய வாகன ஓட்டிகள், லாரியை மடக்கி பிடிக்க முடிவு செய்தனர். மறைமலை நகர் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. அப்போது வாகன ஓட்டியால் தப்பிக்க முடியவில்லை. இறுதியாக அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி திருடன் ஓட்டிச் சென்ற லாரி நின்றது.
அதன்பிறகு லாரியை துரத்தி சென்ற பொதுமக்கள், அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் இருந்து மீட்டு செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் லாரியை திருடி சென்ற திருடனை ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் மறைமலைநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. லாரியை திருடி சென்ற நபர் யார், ஏன் அப்படி செய்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே லாரியில் தொங்கியபடி சென்று பிடிக்க முயன்ற போலீஸ்காரரின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications