“இது சிறுபான்மை அரசுதான்.. ஆனால், சிறுபான்மை மக்களுக்கான அரசு!” உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி!
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை என்று விமர்சித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விஜய், இது சிறுபான்மை அரசுதான், சிறுபான்மை மக்களுக்கான அரசு என்று விளக்கமளித்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாற்றினர். அந்த வகையில் திமுகவின் சட்டமன்ற குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
அவர் பேசுகையில், "தவெக ஆட்சியமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 3.23 கோடி வாக்காளர்கள் உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது. 118 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கூட்டணியால் தான் ஆட்சி செய்ய முடியும். தவெகவுக்கு 108 இடங்கள் தான் இருக்கிறது. தவெக தலைவர் தன் வெற்றி குறித்து நம்பிக்கையில்லாத காரணத்தால் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
சிறுபான்மை அரசு
இன்னும் அந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. தவெகவுக்கு இப்போது 106 எம்எல்ஏக்கள் ஆதரவு தான் உள்ளது. திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மைக்கு எண்ணிக்கை இல்லாததால், கூவத்தூரை மிஞ்சுமளவுக்கு கூத்தடிக்கிறார்கள். இந்த ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்க போகிறது என்று தெரியவில்லை. எம்எல்ஏக்களை கடன் வாங்கி ஆட்சி செய்யும் இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று ஒரே போடாக போட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். 118 எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம். எனவே பெரும்பான்மையை விட அதிக வாக்குகள் கிடைத்ததால் விஜய்யை இந்த அவை முதலமைச்சராக ஏற்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய விஜய், "நம்பிக்கை தீர்மானத்தில் மக்களுக்கான இந்த ஆட்சியை, மனசாட்சி உள்ள மக்களாட்சியை, ஆதரித்து வெற்றி பெற செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய்யின் பதில்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த அணியும் இல்லாமல், தனி அணியாக.. தனி சிறப்பு மிக்க அணியாக.. மக்களை விரும்பும் அணியாக.. களம் கண்டோம். 1967 மற்றும் 77 தேர்தல்களில் மூலம் அமைந்த சாமானியர்களின் அரசை போலவே, 2026 சட்டமன்ற தேர்தல் வாயிலாக தமிழக வெற்றி கழகமும் சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று மக்களிடம் தீர்மானமாக கூறினோம்.
மக்களும் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். வாகை சூடும் வரலாறு திரும்பியது. விசில் அலை வெற்றியலையாக மாறியது. ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது.
இது சிறுபான்மை அரசுதான்
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் 34.92% வாக்குகளுடன், ஒரு கோடி 62 லட்சம் வாக்காளர்களின் ஆதரவுடன்.. மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். தனிப் பெரும்பான்மை நூலிழையில் தள்ளிப் போயிருக்கிறது.
எனவே எங்களை சிறுபான்மை அரசாக எங்கள் நினைத்தால், அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications