20 லட்சம் பயணிகள்.. தனியார் பஸ்களுக்கு டஃப் கொடுத்த அரசு பஸ்கள்! சம்பவம் செய்த போக்குவரத்து கழகம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபரில் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் கூடுதலாக பயணித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தேவையான அளவு பேருந்து வசதிகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெற்றிகரமாக செய்து கொடுத்திருக்கிறது.
அரசு பேருந்துகள் என்றால் ஓட்டை உடைசலுமாக இருப்பது, நேரம் தவறுதல், போதிய வசதிகள் இல்லாதது போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் தற்போது இந்நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. புதிய பேருந்துகள், புதிய வசதிகள், கறாராக பின்பற்றப்படும் நேர கட்டுப்பாடு போன்றவை அரசு பேருந்துகள் பக்கம் மக்களை அதிகமாக ஈர்த்திருக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் புலம் பெயர் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாக சென்னை இருக்கிறது. இங்கிருந்து டெல்டா, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் டெல்டா மாவட்டத்தை பொறுத்த அளவில், சென்னை டூ கும்பகோணத்திற்கு சாதாரண பேருந்தில் ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே எஸ்இடிசி ஏசி பேருந்தில் ரூ.614-650 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண நேரம் சுமார் 8 மணி நேரமாக இருக்கிறது.
தனியார் பேருந்தில் ஏசி வகுப்பில் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண நேரம் 6-7 மணி நேரமாக இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் ஊர் சென்று சேர்ந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை காரணமாகவும், பயணத்திற்கு போதுமான வசதிகள் இருப்பதாலும் தனியார் பேருந்தையே பலரும் நாடி சென்றனர். ஆனால் தனியார் பேருந்துகளுக்கு சமமாக அரசு பேருந்துகளின் தரம் மேம்பட்டிருப்பது பயணிகளை அதிக அளவில் ஈர்த்திருக்கிறது.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அரசு பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்வதற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்கு ஏறப் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம்தான் போக்குவரத்துக கழகத்திற்கான சோதனை காலகட்டம். இந்த மாதம் பண்டிகை காலத்தின் தொடக்கமாக இருக்கிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வரை அரசு விடுமுறை நாட்கள் அதிகமாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் கூடுதல் வாகனங்களை இயக்க வேண்டும். இந்த சவால்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்களுக்கு ஏற்றார் போல பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர முன்பதிவு இல்லாத பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திருக்கிறார்.
இந்நிலையில் மற்றொரு தகவல் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 1.85 கோடி பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் அது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் ஏறத்தாழ 18 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு 1.67 கோடி பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.
ஆக இந்த 18 லட்சம் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை செய்து கொடுத்ததில்தான் அரசு போக்குவரத்து கழகத்தின் சாதனை இருக்கிறது. இந்த சாதனையை மேலும் நீட்டிக்க 1,666 புதிய பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications