சார் ஃபுட் ஆர்டர் பண்ணீங்களா? ஓடிபி சொல்லுங்க கேன்சல் பண்ணனும்! மோசடியாளர்கள் விரிக்கும் புதுவலை!
சென்னை : ஏடிஎம் கார்டு மோசடி, கிப்ட் மோசடி, பென்சில் மோசடி வரிசையில் தற்போது உணவு டெலிவரி நபர்களைப் போல போன் செய்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.
வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் படிப்பு தேவையில்லை. ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற ரீதியிலான மோசடி கும்பலின் நடமாட்டங்களும் அதிகரித்திருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகளை குறிவைத்து ஏதாவது ஒரு சாதாரண வேலையை சொல்லி அதன் மூலம் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டி அதன் பின்னர் அவர்களை ஏமாற்றும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மற்றபடி ஏடிஎம், கார்டு மேல 16 நம்பர் சொல்லு சார் மோசடியெல்லாம் மிகப் பழசாக மாறிவிட்டது.

புது வகை மோசடி
இந்நிலையில் புது வகை மோசடி ஒன்றில் வடமாநில நபர்கள் அடிக்கடி உணவு ஆர்டர் செய்யும் நபர்களின் தொலைபேசி எண், வங்கி கணக்கு விபரங்களை டார்க் வெப்சைட்களில் இருந்து பெற்று மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னையைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து ரு.20599/- பணம் எடுக்கப்பட்டதாகவும். அதனை மீட்க வழி தெரியாமல் தனது நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். அதனை முகநூல் பதிவாகவும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

உணவு டெலிவரி
பணம் திருடப்பட்ட அன்று "சார் நீங்க ஆர்டர் பண்ண food வந்து இருக்கு வாங்கிக்கோங்க உங்க ஏரியாவில் தான் நிக்கிறேன்" என்று ஒருவர் ஃபோன் செய்துள்ளார். நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என்று அந்த நபர் சொல்லி உள்ளார். ஆனால் டெலிவரி பாய் போல பேசிய நபர் ஃபோன் நம்பர் சொல்லி இது உங்க நம்பர் தானே என்று அவரின் எண்ணை சொல்லி உள்ளார். அவரும் ஆமாம் " என்று ஒப்புக்கொள்ள உங்க நம்பரில் இருந்து தான் ஆர்டர் ஆகியிருக்கு என்று சொல்லி உள்ளார்.

ஓடிபி
வீட்டுக்குள் இருந்த மனைவியிடம் கேட்க அவரும் தான் ஆர்டர் செய்யவில்லை என்று சொல்லி உள்ளார். இதனையடுத்து "என்ன ஸார் இப்படி பண்ணுறீங்க.. தேவை இல்லாமல் எனக்கு காசு போகும்" என்று சலித்து கொண்டே சொல்லி உள்ளார் மந்த வடக்கு டெலிவரி பாய் . "நான் ஆர்டர் பண்ணா தானே வாங்க முடியும்" என்று பாதிக்கப்பட்டவர் பேசிய நிலையில், . "சரி ஸார் ஒரு OTP வரும் சொல்லுங்க அப்போ தான் கேன்சல் செய்ய முடியும் " என்றும் என்ற அந்த மர்ம நபர் கூறியுள்ளார்.

பணம் அபேஸ்
இதனையடுத்து அந்த நபருக்கு ஒரு ஓடிபி வந்துள்ளது. இவரும் அதனைப் பார்த்து அந்த எண்ணை சொல்லி உள்ளார். இதனையடுத்து "Ok thank you, have nice day sir" என சொல்லி போனை கட் செய்து உள்ளார் அந்த மர்ம ஆசாமி. கண நேரத்தில் அவரின் அக்வுண்ட்டிலிருந்து சுமார் .20599 ரூபாய் மாயமாகியுள்ளது. புத்தாண்டில் இப்படி ஒரு ஷாக்கை எதிர்பார்க்காத அவர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓடிபி உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என எவ்வளவு வலியுறுத்தினாலும் மக்கள் அலட்சியமாக இருப்பதே இது போன்ற மோசடிகளுக்கு காரணம் எனவும், மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications