சென்னை வேளச்சேரி பஸ் ஸ்டாண்டில் தனியாக வாகன சோதனை.. போலீஸ்காரருக்கு உடனே பறந்து வந்த ஆர்டர்
சென்னை: வேளச்சேரி பஸ் ஸ்டாண்டில் தன்னிச்சையாக வாகன சோதனை செய்த காவலரின் செயலால் விபத்து ஏற்பட்டு ஆட்டோ டிரைவர் காயம் அடைந்தார். இந்த சம்பவத்திற்கு காரணமான காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 40 லட்சம் மோசடி செய்த காவலர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி போக்குவரத்து அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக அய்யம்பெருமாள் என்பவர் பணியாற்றி வருகிறார். காவலர் அய்யம்பெருமாள் சென்னை தரமணி 100 அடி சாலை - வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த 20ம் தேதி தனியாக வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது வேளச்சேரி விஜயநகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை போலீஸ்காரர் அய்யம்பெருமாள் திடீரென்று கையை போட்டு மடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது. ஆட்டோ டிரைவர் காயமடைந்திருக்கிறார்.
இந்த சம்பவம் சென்னை போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அவர்கள் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த மே 20ம் தேதி அன்று காவலர் அய்யம் பெருமாள் பணி முடிவடைந்த பின்னரும் தன்னிச்சையாக வாகன சோதனையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து காவலர் அய்யம் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஆர்.சுதாகர் நேற்று உத்தரவிட்டார்.
இன்னொரு காவலர் சஸ்பெண்ட்: இதேபோல் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 40 லட்சம் மோசடி செய்த காவலர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கிருஷ்ண பிரஷித். இவர், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவருடைய மோசடியில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரூ.40 லட்சம் பணத்தை இழந்தார். இந்த விவகாரத்தில் தலைமை காவலர் கிருஷ்ண பிரஷித் மீது கூடுவாஞ்சேரி போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து காவலர் கிருஷ்ண பிரஷித்தை பணியிடை நீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications