வீடு புகுந்து இளம் பெண்ணிடம் பலாத்கார முயற்சி.. ரவுடியை தட்டித் தூக்கிய போலீஸ்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமில், வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடியை, ஆவடி மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரி சாலையில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், தந்தை உயிரிழந்ததால், தனது தாயாருடன் வசித்து வருகிறார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண், தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மாருதி என்கிற மாறன் என்பவர் மீது, கொலை, அடிதடி, பலாத்கார முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. எனினும் ரவுடி மாருதி, தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இளம் பெண்ணுக்கு தொந்தரவு
இதனிடையே, ரவுடி மாருதி, பட்டாபிராம் பகுதியில் வசித்து வரும் அந்த இளம்பெண்ணை, வெளியே செல்லும்போது ஆபாசமாக பேசுவதும், அவரை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து அந்த இளம் பெண், தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பெண்ணின் தாயும் ரவுடி மாருதியை, இதுதொடர்பாக பலமுறை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும், தனது அராஜக போக்கை ரவுடி மாருதி, கைவிடவில்லை.

வீட்டிற்குள் புகுந்து அத்துமீறல்
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட ரவுடி மாருதி, இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, திடீரென அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளார். மேலும், தனியாக இருந்த அந்த இளம் பெண்ணிடம் தவறான நோக்கத்தில், அவரது ஆடைகளை கிழித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அப்பெண்ணின் வீட்டிற்கு வருவதை அறிந்த ரவுடி மாருதி, அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து, அந்தப் பெண், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தார். இளம் பெண்ணிண் புகாரை பெற்றுக்கொண்ட ஆவடி மகளிர் போலீசார், ரவுடி மாருதி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த ரவுடி மாருதி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

சுற்றி வளைத்து கைது
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலீசார், பட்டாபிராம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி மாருதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு ரடிவுயை அழைத்துச் சென்று போலீசார், அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரவுடி மாருதியை புழல் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் - கோரிக்கை
ஏற்கெனவே கொலை, அடிதடி, பலாத்கார முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ரவுடி மாருதி மீது நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் அதேபோன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி மாருதியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை, அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடியை, போலீசார் கைது செய்துள்ள சம்பவம், பட்டாபிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications