போலீசுக்கே பாதுகாப்பில்லை? இருட்டில் தொடர்ந்த உருவம்.. கையை கடித்த பெண் போலீஸ்! பழவந்தாங்கல் பகீர்!
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிகள் தொடங்கி காவல் நிலையங்கள் வரை இந்த கொடூரம் அரங்கேறி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் பெண் காவலரை சென்னையில் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதால் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையிலேயே பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயதான பெண் காவலர் ஒருவர் நுண்ணறிவு பிரிவு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன் தினம் பணி முடிந்த அவர் சென்னை எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார ரயில் சென்றுள்ளார். தொடர்ந்து பிளாட்பாரத்தில் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது இருள் சூழ்ந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து உள்ளார்.
இதை அடுத்து அச்சமடைந்த அந்த பெண் காவலர் வேகமாக செல்ல முயன்ற போது அந்த மர்ம நபர் பின்பக்கமாகச் சென்று பெண் காவலரின் வாயை பொத்தி கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபரின் கையைக் கடித்த பெண் காவலர் கூச்சல் போட்டுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
விசாரணையில் அவரது பெயர் சத்திய பாலு என்பதும் மது போதையில் அவர் இவ்வாறு செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்து சத்திய பாலுவை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சத்ய பாலு மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் அவர் குற்றப் பின்னணி கொண்ட நபர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் மது குடித்து விட்டு ரயில் நிலையத்தில் தனியாக வரும் பெண்களை சத்யபாலு பாலியல் வன்கொடுமை செய்து வந்தததும் தெரிய வந்தது. இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்திய பாலு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு நிலையில் அவரது கரு கலைந்தது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சி தீர்வதற்குள் தற்போது ரயில் நிலையத்தில் குறிப்பாக பெண் காவலருக்கே பாலியல் தொல்லை தரப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications