பறை இசையால் பல அவமானங்கள் பட்டவர்; இன்று அப்ராட் பறக்கிறார்!
சென்னை: பறை இசை மூலம் சாதிய கட்டுக்களை உடைத்து எறிந்திருக்கிறார் சவுண்ட் மணி.
யார் இவர்? எப்படி இந்தத் துறைக்குள் வந்தார்? அது என்ன சவுண்ட் மணி.

"கல்லூரி படிக்கும் போது நான் பறை இசை வாசிப்பேன். மேசையில் வாசிப்பேன். அதைப் பார்த்த பசங்க என்னைக் கலாய்ப்பதற்காக சவுண்ட் மணி என்றார்கள். அதுவே பட்டமாக மாறிவிட்டது" என்கிறார்.
"சின்ன வயசிலிருந்தே எனக்குப் பறை என்றால் பிடிக்கும். என் வீட்டுப் பக்கத்திலேயே பறை இசைக் கலைஞர்கள் இருந்தார்கள். அப்போது எல்லாம் எனக்கு வாசிக்கத் தெரியாது. அவர்கள் வாசித்து முடித்து ஓய்வு எடுக்கப் போகும் போது நான் போய் சும்மா தட்டிப் பார்ப்பேன்.

அப்படி ஆரம்பித்ததுதான் என் ஆர்வம். அந்த ஆர்வம் வளர்ந்து நான் முறையாகப் பறை இசை கற்ற ஆரம்பித்த போது ஏகப்பட்ட நெருக்கடிகளைச் சந்தித்தேன். அந்தளவுக்கு மிகப் பெரிய அடிகள் கிடைத்தன" என்கிறார் பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு இசைக்கருவிகளை இசைப்பதில் வல்லவராக இருந்து வரும் 'சவுண்ட் மணி'.
அவரிடம் என்ன மாதிரியான நெருக்கடிகள் இருந்தன எனக் கேட்டுக் கொள்வதில் விருப்பம் இருக்கவே அதைப் பற்றி பேச்சைத் திரும்பினோம். "என் ஆசிரியர் ஒருமுறை சொன்ன வார்த்தை எனக்குள் அதிக மனவலியை ஏற்படுத்தியது.

நான் பறை இசையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்ததைப் பார்த்து அவர் சாதிரீதியாக என்னைத் திட்டினார். அதேபோல் எங்க அம்மா ஒருநாள், 'நீ கீபோர்ட், கிட்டார், வயலின் கத்துக் கொள்ளப் போயிருந்தால் நான் பெருமையாக வெளியே சொல்லிக் கொண்டிருப்பேன். நீயே பறையடிக்கப் போய்கிட்டு இருக்க, இதை எப்படி பெருமையாக வெளியில் சொல்ல முடியும்?' என்றார்.
"குடும்பத்தில் யாரும் பெரிய அளவில் படித்தவர்கள் இல்லை. அப்பா ஒரு டிரைவர். அம்மா, வீட்டில் இருக்கிறார். நாங்கள் ஒரு நடுத்தரக் குடும்பம்தான். "நான் எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில்தான் படித்தேன். சவுண்ட் இன்ஜினியரிங்கதான் படித்தேன். ஆனாலும் பறை வாசிப்பதுதான் கனவாகக் கொண்டிருந்தேன்.

எனவே வீட்டுக்குத் தெரியாமல் போய் பறை வகுப்புக்களில் பங்கேற்றேன். ஒரு கட்டத்தில் நான் பறை வகுப்புக்குப் போவதை அண்டை வீட்டார் பார்த்து வந்து வீட்டில் சொல்லிவிட்டார்கள்.
அது எனக்குப் பெரிய நெருக்கடியைத் தந்தது. அப்படி இருந்தும் கல்லூரி போவதாகப் பொய் சொல்லிவிட்டுப் பல நாள்கள் பறை கற்றுக் கொள்ளச் சென்றிருக்கிறேன்.

எனக்கு எப்போது சமூகம் இதைக் கெளரவ குறைச்சலாகப் பார்க்கிறது என்பது தெரியவந்ததோ, அப்போதுதான் அதன் மீது வெறி அதிகமாகி விடாப்பிடியாகப் பறை இசைக் கலைஞனாக வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தேன்" என்கிறார் சவுண்ட் மணி.

"நான் எந்த ஊருக்குக் கச்சேரி வாசிக்கப் போனாலும் அங்க இருப்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி, 'நீங்க என்ன ஆளுங்க? அப்படி இல்லை என்றால் உங்க குலத் தெய்வம் என்ன?' என்பதுதான்" என்று கூறும் சவுண்ட் மணி இன்று இசைக் கச்சேரிகள் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வந்துள்ளார். மகன் வெளிநாட்டுக்கு எல்லாம் அழைக்கப்படுவதை உணர்ந்த பெற்றோர் இப்போதுதான் அவரது கலையை ஏற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சவுண்ட் மணியின் தனித்துவம் என்னவென்றால், அவர் வெறும் பறை இசைக் கலைஞர் அல்ல. பல விதவிதமான பாரம்பரிய இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்து வைத்துள்ளார்.
சின்ன கொட்டாங்குச்சி தொடங்கி, பெரிய மூங்கில் குழல் வரை அவரது இசையில் ஒரு இனிமை ஒலிக்கிறது. மேலும் அந்த இசைக்கருவிகள் மீது அலாதியான ஒரு அன்பை வைத்துள்ளார் மணி.

ஒரு காலத்தில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வந்த இவர், இப்போது பல மேடைகளில் கவுரவிக்கப்படுகிறார். வரும் வாய்ப்புகளைவிட அதிக மரியாதையும் இப்போது கிடைக்கிறது என்கிறார் இந்த இளம் இசைக் கலைஞர் சவுண்ட் மணி.
ஒரு கலைஞனுக்குக் கவுரவம் தானே முதல் மரியாதை!












Click it and Unblock the Notifications