சென்னை மாரத்தானில் பங்கேற்கிறீங்களா?.. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 5 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இங்கு வசித்து வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் சென்னையில் பலரும் வேலைவாய்ப்பு, தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சொந்த ஊரில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளனர்.

சென்னை மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரது முதல் தேர்வாகவும் இருப்பது மெட்ரோ ரயில் சேவை தான்.
இந்த மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் என்பதால் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற ஜனவரி 05 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications